
ஐ.ஏ. காதிர் கான்
இந்த நாட்டின் முஸ்லிம்கள் தொடர்ந்தும் ஒரே கட்சிக்கு வாக்களிப்பவர்கள் அல்ல என்பதனை எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிரூபிக்க வேண்டும். நாட்டின் நலனுக்காகவும் பிரதேசத்தின் நலனுக்காகவும் அனைத்து இனமத வேறுபாட்டை மறந்து ஒன்று பட்டு வாழ, முஸ்லிம்களாகிய நாம் தயாரானவர்கள் என்ற செய்தியை நம் நாட்டு மக்களுக்கு உரத்துச் சொல்ல வேண்டும் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளரும் உடுநுவர தேர்தல் தொகுதியின் அமைப்பாளருமாகிய ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.
வேட்பாளர் பாரிஸின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (30) வியாழக்கிழமை உடுநுவர, எலமல்தெனியவுக்கு விஜயம் மேற்கொண்டார்.
உடுநுவர, எலமல்தெனிய பியல் வைட் பெலஸ் (PEARL WHITE PALACE) மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் பேசும் போது கூறியதாவது,
ஆளும் கட்சி சார்பான பாராளுமன்ற வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்து நாட்டின் ஸ்தீரத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். இம்முறை முஸ்லிம்கள் ஆளும் கட்சியில் பங்கெடுக்கவிட்டால், தனித்து ஒதுக்கப்படும் நிலைக்கு தள்ளப்படலாம். இது, இன மத மொழி ரீதியாலான முரண்பாடுகளை இன்னும் கடுமையாக்கலாம்.
ஐக்கிய தேசியக் கட்சி இன்று இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. முஸ்லிம் வேட்பாளர்கள் பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுகின்றனர். இது சமூகத்தின் வாக்குப் பலத்தைச் சிதறடிக்க வைக்கின்றது. இது பாராளுமன்ற பிரதி நிதித்துவங்களை இழக்கச்செய்யலாம். குறைந்தது பத்து வருடங்களுக்கு ஆளும் கட்சியே தொடர்ந்தும் ஆட்சியில் இருக்கும் என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இந்த அடிப்படையில் நோக்கும் போது, இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அமையவிருக்கும் அரசாங்கத்திலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகவும், சமூகத்தின் மீதுள்ள பாரிய பொறுப்பாகவுமே கருதின்றேன் என்றார்.
No comments:
Post a Comment