வட, கிழக்கு தேசிய பிரச்சினையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செவ்வனவே செயற்படவில்லை என, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் மட்டு. மாவட்ட வேட்பாளர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி செயலக பிரிவிலுள்ள மகிழூர், குறுமண்வெளி போன்ற பிரதேசங்களில் நேற்றுமுன்தினம் (02) மேற்கொண்ட பிரசாரத்தின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களினுடைய பிரச்சினையினை தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் சொல்வதும் காலத்திற்கேற்ப அரசாங்கங்கள் வந்ததும் அதற்கேற்ப தொழிற்படுவதும், தேர்தல் களத்தில் ஒன்றைச் சொல்வதும், புதிய அரசுகள் வந்ததும் அரசாங்கத்துக்கேற்ப மாறிக்கொள்வதுமாகவே கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.
அரசியல் சாசனத்தின் 13 ஆவது சரத்தின் கீழ் தீர்வு கிடைக்காது என்பது கூட்டமைப்புக்கு தெரிந்தும் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.
கூட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கம் கொடுக்கும் சுகபோகங்களைப் பெற்றுக் கொண்டு ஐந்து வருட காலம் கடந்ததும் வெளியேற, புதியவர்கள் உள்நுழைந்து அதே சுகபோகங்களை அனுபவிக்கின்றனரே தவிர கூட்டமைப்பு மக்கள் மைய அரசியலை முன்னெடுப்பதாக தெரியவில்லை. இவ்வாறு தொடர்ச்சியாக கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டு வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு மாற்று சக்தியாகவே தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயற்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளோ கிழக்குத் தமிழர் ஒன்றியமோ இதற்கு ஈடாகாது. மட்டக்களப்பின் எல்லா இடங்களிலும் அமோக வாக்குகளை பெற்று நிச்சயமாக மூன்று ஆசனங்களை பெற்று வெற்றியீட்டுவோம் என்றார்.
மண்டூர் குறூப் நிருபர்
No comments:
Post a Comment