மலையகத்திற்கு என்று தனியான பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான வேலைகள் ஐம்பது சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரசார செயலாளர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
ஹற்றனில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலின்போது பொதுஜன பெரமுனவுக்கு 32 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆதரவு வழங்கினார். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டும் உள்ளார்கள். அதில் முதலாவது கோரிக்கையாக காணப்படுவது மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகம். தற்போது அந்த வேலைகள் ஐம்பது சதவீதம் நிறைவுபெற்றுள்ளது.
இந்த 32 அம்ச கோரிக்கை நிறைவேற்றினால் மலையக மக்கள் இன்னொரு மாற்றத்திற்கு கொண்டுவரப்படுவார்கள். பலர் 80 வருட அரசியல் வாழ்க்கையில் ஒன்று செய்யவில்லை என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால் மலையக மக்களை அடிமை வாழ்க்கையிலிருந்து தேசிய நீரோட்டத்திற்கு கொண்டு வருவதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உழைப்பு தான் காரணம்.
நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் 08 தமிழ் வேட்பாளர்களும் 03 சிங்கள வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரையில் இரண்டாக பிரிந்து நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் களத்தினை சந்தித்து கொண்டிருக்கின்றது.
இன்று பலர் தேர்தல் களத்தில் வந்திருந்த போதிலும் அவர்கள் தமிழர்களின் வாக்குகளை பிரித்து குறைப்பதற்காக பெரும்பான்மையினரால் ஏவி விடப்பட்ட ஏஜன்ட்களாகவே களமிறங்கியியுள்ளனர். அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறையுமே தவிர கூட்ட முடியாது.
ஆகவே வாக்கு பிரிப்பாளர்களுக்கும் ஏஜன்ட்டுக்களுக்கும் வாக்களிக்காமல் வெல்லக் கூடியவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். நான் ஏற்கனவே கூறியது போல அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் 32 கோரிக்கைகளை முன் வைத்தார். அதை ஆராய்ந்து பார்த்தால் விரிவான பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
அதில் கல்வி சம்பந்தமான முன்மொழிவுகள் மலையக மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் சுயதொழில் வாய்ப்பு, வேலை வாய்ப்பு, காணிகளை சுய தொழிலுக்காக பிரித்து கொடுப்பது. ஆக்ரோ சிஸ்ட்டம் என்ற முறையிலே தேயிலை தோட்டங்களை மாற்றியமைப்பது. விளையாட்டுத்துறை, வைத்தியத்துறை போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கோரிக்கைகள் கூறப்பட்டுள்ளன என்றார்.
ஹற்றன் விசேட நிருபர்
No comments:
Post a Comment