(நா.தனுஜா)
அரசாங்கத்தின் இயலாமைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதுடன், வீதிகளில் இறங்கிப்போராடுவதைத் தடுப்பதற்காகவே அரசின் அனைத்துக் கட்டமைப்புக்களுக்கும் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றார்கள் என்று சுட்டிக்காட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்ரிய, தற்போது அமைச்சுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் பெருமளவான துறைகளுக்கெனத் தனித்தனியாக ஜனாதிபதி செயலணிகள் உருவாக்கப்படுகின்றன.
அவ்வாறெனின் அதே வேலையைச் செய்வதற்கு அமைச்சுக்கள் பிரிக்கப்பட்டு, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஊதியம் வழங்க வேண்டியதன் அவசியமென்ன? எனவே அனைத்துப் பொறுப்புக்களையும் ஜனாதிபதி செயலணிகளிடமே வழங்கிவிட்டு, அமைச்சுக்களை இல்லாமல் செய்தால் நாட்டில் ஜனநாயகம் இல்லையென்ற பிரச்சினையொன்று எழுந்தாலும், மக்களின் வரிப்பணம் சேமிக்கப்படுவதோடு பொருளாதாரத்தையும் ஓரளவிற்கு மீட்கமுடியும் என்றும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது சர்வதேச அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடனை மீளச்செலுத்த முடியாத நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றன.
குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே தனது இந்திய விஜயத்தின் போது, தம்மால் கடன்களை மீளச்செலுத்த முடியவில்லை என்றும் நிதியுதவி வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். இவ்வாறு ஒரு நாட்டின் தலைவர் பகிரங்கமாகக் கூறுவதனால் ஏனைய சர்வதேச நாடுகள் கொண்டிருக்கும் நம்பிக்கை இழக்கப்படுவதுடன், அவை கடன்களை வழங்குவதற்கும் தயங்கும் நிலையேற்படும்.
புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் பெறுமதிசேர் வரியைப் பெருமளவினால் குறைத்தார்கள். ஆனால், அதனால் சுமார் 500 பில்லியன் ரூபா நட்டமே ஏற்பட்டது. இவ்வாறு இந்த அரசாங்கம் மேற்கொண்ட அனைத்துச் செலவுகளாலும் எவ்வித வருமானமும் ஈட்டப்படவில்லை. மாறாக அனைத்தும் நட்டத்தையே சம்பாதித்துக்கொண்டன. இவற்றிலிருந்து நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்திடம் முறையான திட்டமிடல்களோ அல்லது நிர்வாகத்திறனோ இல்லை என்பது தெளிவாகின்றது.
இதன் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதுடன், வீதிகளில் இறங்கிப்போராட ஆரம்பிப்பார்கள். எனவே, அவ்வாறு மக்கள் கிளர்ந்தெழுவதைத் தடுப்பதற்காகவே அரசின் அனைத்துக் கட்டமைப்புக்களுக்கும் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றார்கள். அதேபோன்று, தற்போது அமைச்சுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் பெருமளவான துறைகளுக்கெனத் தனித்தனியாக ஜனாதிபதி செயலணிகள் நியமிக்கப்படுகின்றன.
அவ்வாறெனின் அதே வேலையைச் செய்வதற்கு அமைச்சுக்கள் பிரிக்கப்பட்டு, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஊதியம் வழங்கவேண்டியதன் அவசியமென்ன? எனவே, அனைத்துப் பொறுப்புக்களையும் ஜனாதிபதி செயலணிகளிடமே வழங்கிவிட்டு, அமைச்சுக்களை இல்லாமல் செய்தால் நாட்டில் ஜனநாயகம் இல்லையென்ற பிரச்சினையொன்று எழுந்தாலும், மக்களின் வரிப்பணம் சேமிக்கப்படுவதோடு பொருளாதாரத்தையும் ஓரளவிற்கு மீட்கமுடியும்.
இவ்வாறு செயலணிகளையும், குழுக்களையும் உருவாக்குவதன் ஊடாக, அமைச்சர்களின் செயற்பாடுகளை முடக்கி அதற்குப் பதிலாக நாங்களும் எமது குழுவினருமே நாட்டை ஆள்வோம் என்பதையே காண்பிக்க முயற்சிக்கின்றார்கள். மத்திய வங்கியின் அதிகாரிகளை அழைத்து கடுந்தொனியில் பகிரங்கமாக அவர்களைச் சாடுவதன் ஊடாக, மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். அதுமாத்திரமன்றி சர்வதேசத்தைப் பொறுத்தவரையில் அனைத்து நாடுகளினதும் துறைமுகங்கள் இலாபமுழைப்பவையாகவே உள்ளன.
எமது நாட்டின் துறைமுகங்கள் தான் நட்டத்தில் இயங்குகின்றன. கடந்த அரசாங்கத்தினால் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 51 சதவீதம் இலங்கைக்கும், 49 சதவீதம் இந்தியாவிற்கும் பிரிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அந்த இலங்கைக்குரிய 51 சதவீதத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. இதன் உண்மைத்தன்மை தொடர்பான தெளிவுபடுத்தல்களை அரசாங்கம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment