கடந்த பத்து வருட காலமாக நாம் யாருக்கு வாக்களிப்பது என்பது தெரியாமலே வாக்களித்து வந்துள்ளோம் - அனுஷா சந்திரசேகரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 29, 2020

கடந்த பத்து வருட காலமாக நாம் யாருக்கு வாக்களிப்பது என்பது தெரியாமலே வாக்களித்து வந்துள்ளோம் - அனுஷா சந்திரசேகரன்

மலையக மாற்றத்தில் ஆசிரியர்களின் ...
கடந்த 10 வருட காலமாக நாம் யாருக்கு வாக்களிப்பது என்பது தெரியாமலே வாக்களித்து வந்துள்ளோம். அதனால் இன்று ஒரு சில அரசியல் தலைவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள், மலையக மக்களின் வீடும், பாதையும் மாத்திரம்தான் அரசியல் என்று ஆனால் மலையக இளைஞர்கள் யுவதிகள் தமது படித்த படிப்புக்கேற்ற வேலையின்றி தவிக்கிறார்கள். என நுவரெலியா மாவட்ட சுயேட்சைக்குழு வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் மறைந்த தலைவர் சந்திரசேகரனின் மகளுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

திஸ்பனை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், முதியோர்கள் சொந்த மண்ணில் பல மணித்தியாலங்கள் கொடுப்பனவுகளுக்காக நின்று மிகவும் மோசமான நிலையில் வரிசையில் நின்று ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறார்கள். அவர்களுக்கென்று பேசவும் யாருமில்லை அவர்களை அவமானப்படுத்தினால் கேட்கவும் நாதியில்லை. 

இன்று மலையகத்தில் எத்தனையோ படித்த பெண்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்குப் படித்த படிப்புக்கு வேலையில்லை. நுவரெலியாவில் அவர்களுக்கு வேலை வழங்குவதற்குத் தொழில் மையங்களும் உருவாக்கப்படவில்லை. உருவாக்குவதற்கும் மலையக அரசியல் தலைமைகளும் முன்வரவுமில்லை.

அதனால் மலையக பெண்களுக்குத் திறமையும் படிப்பும் இருந்தாலும் வெளி மாவட்டங்களில் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை மலையக பெண்கள் விரும்ப தக்கது என்பதுதான் இன்று விளம்பரமாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் எமது இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கு இப்பகுதியிலேயே வேலை வாய்ப்பு உருவாக வேண்டும். எனவே அற்ப சொற்ப சலுகைகளுக்காக ஏமாந்தது போதும் இனியாவது விழித்தெழுவோம்.

மலையகத்தில் இன்று பெண்கள் படித்திருந்தாலும் அந்த படிப்புக்கு வெளி மாவட்டங்களில் படிப்புக்கேற்ற மரியாதையில்லை. எனவே இன்று இளைஞர்கள் நிறையப் பேர் மலையகத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கஸ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கும் இந்த வேலை வாய்ப்புதான் பிரச்சினையாக உள்ளது. அவர்களின் படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை எத்தனையோ விளையாட்டு வீரர்கள் இருந்தாலும் அவர்களுக்குத் தேசிய ரீதியில் இடம் கிடைப்பதில்லை.

ஏனென்றால் அவர்களை அடையாளப்படுத்த எந்த மலையக தலைமையும் தயாரில்லை. ஆகவே நானும் நீங்களும் கஷ்டப்படலாம் ஆனால் 10 வருடத்திற்கு மேல் நமது பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது. கூப்பனுக்காக வரிசையிலும் நிற்கக்கூடாது. 

இந்த நிலை ஏற்பட வேண்டுமானால் மலையத்தில் புதியதொரு மாற்றம் ஏற்படவேண்டும் அதற்காக நான் இன்று களமிறங்கியிருக்கிறேன் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் என் கையில் என அவர் மேலும் தெரிவித்தார்.

மலையக நிருபர் சுந்தரலிங்கம்

No comments:

Post a Comment