பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவாக ஜனாதிபதி புத்தளம் விஜயம் - மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு - News View

About Us

About Us

Breaking

Monday, July 6, 2020

பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவாக ஜனாதிபதி புத்தளம் விஜயம் - மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு

பொதுஜன முன்னணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (06) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

புத்தளம், நீலபெம்ம கிராமம் மழைக் காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். இதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

புத்தளம் ஆனமடுவ வாராந்த சந்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் அடிக்கடி முகங்கொடுக்கும் காட்டு யானைகள் அச்சுறுத்தலுக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார். உரப் பற்றாக்குறை உள்ளிட்ட விவசாயம் சார்ந்த ஏனைய பிரச்சினைகளையும் மக்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

புத்தளம் நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்றார். வேட்பாளர் சிந்தக்க மாயாதுன்னே இதனை ஏற்பாடு செய்திருந்தார்.
வில்பத்து பூங்கா, எலுவங்குளம் நுழைவு பாலங்களை புனர்நிர்மாணம் செய்து சுற்றுலாத்துறையினரின் வருகைக்கு சந்தர்ப்பமளிக்குமாறு சுற்றுலா கைத்தொழிலில் ஈடுபடுவோர் ஆலோசனையொன்றை முன்வைத்தார்கள். 

சேனைக் குடியிருப்பு கிராமத்தில் நிலம் கீழிறங்கும் அச்சுறுத்தல் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பயிர்ச் செய்கைக்கு கலா ஓயவில் இருந்து நீரை பெற்றுக்கொள்ளும் ஆலோசனையும் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்டது. அனுமதியின்றி காணிகளை கையகப்படுத்தல் மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒப்பந்தத்தின் பிரகாரம் பிரதேச மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்காமை தொடர்பாகவும் தீர்வுகளை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சனத் நிஷாந்த, பிரியங்கர ஜயரட்ன, அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க பிரியந்த உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment