அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை தள்ளி வைக்கலாம் : டொனால்டு டிரம்ப் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 30, 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை தள்ளி வைக்கலாம் : டொனால்டு டிரம்ப்

மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் நிலைக்கு வரும் வரை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று டொனால்டு டிரம்ப் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு உலகம் முழுக்க ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் நிலையில், தற்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மிக அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையிலும், அமெரிக்கா தற்போது அந்நாட்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது.

வரும் நவம்பர் முதல் வாரத்தில் அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

உலக நாடுகள் எல்லாம் இந்த தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. அங்கு தேர்தலுக்கான பிரசாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நடக்க உள்ள இந்த தேர்தலில் பெரும்பாலான மக்கள் தபால் வாக்குகளை செலுத்த ஊக்குவிக்கப்பட உள்ளனர். 

பெரும்பாலும் 70%-க்கும் அதிகமான நபர்கள் தபால் வாக்குகளை செலுத்த வாய்ப்புள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமெரிக்காவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் முன்பே குற்றஞ்சாட்டி இருந்தார். தபால் வாக்குகள் மூலம் தேர்தல் நடந்தால் அது சரியாக இருக்காது. இதனால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. என்று டிரம்ப் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் டிரம்ப் இது தொடர்பாக குற்றஞ்சாட்டி இருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘அனைவரும் அஞ்சல் முறையில் வாக்களித்தால் 2020ஆம் ஆண்டு தேர்தல் வரலாற்றிலேயே தவறான, மோசடியாக அமைந்துவிடும். இது அமெரிக்காவுக்கே மிகப்பெரிய அவமானமாகிவிடும். மக்கள் முறையாக, பாதுகாப்பாக வாக்களிக்கும் வரை தேர்தலை தள்ளிவைக்கலாமா?’’ எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment