
பொய் வாக்குறுதிகளை நாட்டு மக்கள் இனியும் நம்பத் தயாரில்லை. பிளவு பட்டுப்போயுள்ள ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலின் பின்னர் மரணித்துப் போன கட்சியாகவே இருக்குமென போக்குவரத்து மற்றும் மின்வலு, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
வாக்குறுதி அரசியல் தற்போது நாட்டில் கிடையாது. நாட்டு மக்களுக்கு தற்போது தேவைப்படுவது வாக்குறுதி அல்ல. செயலில் காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்த அமைச்சர், கோட்டாபய ராஜபக்ஷ செயல்வீரர் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கன்றி சிறிகொத்த தலைமையகத்தை கைப்பற்றிக் கொள்வதிலேயே முனைப்புடன் செயற்படுகிறது. எனவும் அதற்காகவே இரு தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகிறார்கள்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் இம்முறை தேர்தல் மேடைகளில் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளில் யானையைப் பெற்றுக் கொடுப்போம் புலியைப் பெற்றுக் கொடுப்போம் என்று குரல் எழுப்பினாலும் நாட்டு மக்களை அவ்வாறு ஏமாற்ற முடியாது.
தாம் வெற்றி பெற்றால் மக்களுக்கு 20 ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பதாக சஜித் பிரேமதாச தெரிவிக்கும்போது ரணில் விக்கிரமசிங்க தாம் 10000 ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்து வருகின்றார். பொதுமக்களின் வாக்குகளை காசுக்கு விற்கும் அரசியல் தற்போது நாட்டில் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் மக்களுக்கு பெருமளவு வாக்குறுதிகளை வழங்கினார்கள். எனினும் நாட்டு மக்கள் அதனை நம்பவில்லை. எனினும் எந்த வாக்குறுதியையும் வழங்காது கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களின் 69 இலட்சம் வாக்குகளில் வெற்றி பெற்றார்.
ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த காலத்தில் செயலில் செய்து காட்டினார். அந்த நம்பிக்கை மக்களிடம் காணப்பட்டதால் அவரை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உச்ச அளவில் வெற்றியடையச் செய்தனர்.
இத்தகைய நிலையில் மக்களுக்குப் பெருமளவு வாக்குறுதியை வழங்கிய ஐக்கிய தேசிய கட்சிக்கு என்ன நடந்துள்ளது? தற்போது அந்த கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. அக்கட்சி இப்போது நடுக்கடலில் தத்தளிக்கும் மாலுமி இல்லாத கப்பல் போன்றுள்ளது. அது தொடர்ந்து பயணிக்க முடியாது இடையில் மூழ்கிவிடும் இந்த தேர்தலுக்கு பின் ஐக்கிய தேசியக் கட்சி மரணித்துப் போன கட்சியாகவே இருக்கும்.
பொதுத் தேர்தலின் பின்னர் பெரும்பாலும் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் அந்த தேர்தலிலும் நாமே வெற்றி பெறுவோம். அதனால் அந்த கட்சி இந்த தேர்தலின் பின்னர் கரைந்து போகும். ஜனநாயக ஆட்சி முறைமையில் அரசாங்கத்துக்கு பலமான எதிர்க்கட்சி ஒன்று அவசியமாகிறது. இந்த பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்திற்கு பலமிழந்த பலவீனமான எதிர்க்கட்சியே வரப்போகிறது.
நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும் என்றால் பலமான விமர்சனங்களை முன்வைக்கக்கூடிய பலமுள்ள எதிர்க்கட்சி அவசியமாகிறது. என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment