லிபியாவுக்கு துருப்புகளை அனுப்புவதற்கு எகிப்து பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது. அண்டை நாடான லிபியாவில் துருக்கி ஆதரவு படைக்கு எதிராக தமது இராணுவத்தை அனுப்பப் போவதாக எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குற்றவியல் ஆயுதக் குழுக்கள் மற்றும் வெளிநாட்டு தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக எகிப்து தேசிய பாதுகாப்பிற்காக எகிப்து எல்லைகளுக்கு வெளியில் போர் நடவடிக்கைக்கு எகிப்து படைகளை அனுப்ப அந்நாட்டு பாராளுமன்றம் ஒருமனதான ஒப்புதல் அளித்துள்ளதாக அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இந்த படை நடவடிக்கை மேற்கு முன்னணியாக உருவாக்கப்படவுள்ளது. தமது மேற்கு எல்லை நாடாக லிபியா இருப்பதை குறிக்கும் வகையிலேயே இந்தப் பெயர் அமையவுள்ளது. எனினும் இது லிபியாவின் போட்டி அரசுக்கு ஆதரவு அளிக்கும் துருக்கிக்கும் எகிப்துக்கும் இடையிலான மறைமுக போர் நேரடிப் போராக மாற வாய்ப்பு உள்ளது.
லிபியாவின் கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் கலீபா ஹப்தர் படைக்கு எகிப்துடன் ஐக்கிய அரபு இராச்சியம், ரஷ்யா ஆதரவு அளிப்பதோடு துருக்கி திரிபோலியை தளமாகக் கொண்ட லிபிய அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
No comments:
Post a Comment