இலங்கை கல்வித்துறை வரலாற்றில் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறல் - ஆசிரிய ஆலோசகர் சேவைக்கு 4,471 பேர் தெரிவாகும் வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, July 5, 2020

இலங்கை கல்வித்துறை வரலாற்றில் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறல் - ஆசிரிய ஆலோசகர் சேவைக்கு 4,471 பேர் தெரிவாகும் வாய்ப்பு

இலங்கை கல்வித்துறை வரலாற்றில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த 'இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை' எனும் புதிய சேவை புதிதாக உதயமாகியுள்ளது. 

இப்புதிய சேவை கடந்த ஜுலை மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

கல்வித்துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட இச்சேவைக்கான அறிவித்தல் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் கடந்த ஜுலை மாதம் 1ஆம் திகதி வெளியான அதிவிசேட வர்த்தமானியில் 16 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

இலங்கை அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் 2019.08.22 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட இலங்கை ஆசிரிய சேவைப்பிரமாணக்குறிப்பு இவ்வர்த்தமானிப் பிரகடனத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இலங்கைக் கல்வித்துறையில் இதுவரை இருந்துவரும் இலங்கை கல்வி நிருவாக சேவை, இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை என்பவற்றுக்கு அப்பால் புதிதாக இச்சேவை கல்விப்பரப்பிற்குள் உருவாக்கப்பட்டுள்ளது. 

இச்சேவைக்காக முதற்கட்டமாக 4471 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களில் 3188 பேர் சிங்கள மொழி மூலமும் 1283 பேர் தமிழ் மொழி மூலமும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தெரிவாகவுள்ள 1283 தமிழ் மொழி ஆசிரிய ஆலோசகர்களுள் வட மாகாணத்தில் 377 பேரும் கிழக்கு மாகாணத்தில் 370 பேரும் தெரிவாவர். இந்த 4471 பேரில் பெரும்பான்மையாக 1358 பேர் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்களாகத் தெரிவாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதற்கென தற்சமயம் கடமையாற்றும் கடமை நிறைவேற்று ஆசிரியர் ஆலோசகர்கள் பல்வேறு போராட்டங்களை கடந்த காலங்களில் நடாத்தி வந்துள்ளமை தெரிந்ததே. 

இச்சேவைக்கு நாடளாவியரீதியில் 4471 சேவையிலுள்ள ஆசிரியர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளனர். இப்புதிய சேவையில் வகுப்பு 2 வகுப்பு 1 என இரு வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் தகுதியானவர்கள் இச்சேவைக்கு உள்வாங்கப்படுவார்கள். தற்போது சேவையிலுள்ள ஆசிரிய ஆலோசகர்களுக்கு அவர்களது சேவைக்காலத்திற்கு உரிய புள்ளிகள் வழங்கப்பட்டு முறைப்படி இச்சேவைக்குள் தகுதியானவர்க்கு அந்தந்த வகுப்பினுள் உள்ளீர்க்கப்படுவார்கள். 

மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்லது மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் அல்லது மாகாண பிரதம செயலாளர் அல்லது மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் ஆசிரிய ஆலோசகர் பதவிக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்காக முறையாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இந்த சேவைப் பிரமாணக் குறிப்பு செயல்வலுப் பெறும் தினத்திலிருந்து ஆறு (06) மாத காலத்திற்குள் ஆசிரிய ஆலோசகர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு உள்ளீர்க்கப்படுவதற்கான விருப்பத்தை தெரிவித்தல் வேண்டும்.

காரைதீவு நிருபர்

No comments:

Post a Comment