225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஆற்றில் தள்ளினாலும் ஆறும், சுற்று சூழலுமே பாதிக்கப்படும் ஆகவே தவறுகளை திருத்திக்கொண்டு அரசியலில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க தயார் - முன்னாள் பிரதமர் ரணில் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 12, 2020

225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஆற்றில் தள்ளினாலும் ஆறும், சுற்று சூழலுமே பாதிக்கப்படும் ஆகவே தவறுகளை திருத்திக்கொண்டு அரசியலில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க தயார் - முன்னாள் பிரதமர் ரணில்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கம் தீவிரமடைந்தால் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும். இதனால் நாட்டில் தொழிலின்மை பிரச்சினை ஏற்படும். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் உறுதியான கொள்கை கிடையாது. ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினரை உள்ளடக்கி முறையான கொள்கைகளை தற்போது வகுக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற, தலைமுறை நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இளம் தலைமுறையினர் அரசியலை வெறுப்பதற்கு அரசியல்வாதிகளே காரணம் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தியவன்னா ஆற்றில் தள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். 225 உறுப்பினர்களை ஆற்றில் தள்ளினாலும் ஆறும், சுற்று சூழலுமே பாதிக்கப்படும். ஆகவே தவறுகளை திருத்திக்கொண்டு அரசியலில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க தயார்.
 
இளம் தலைமுறையினர் அரசியலை வெறுப்பது அவர்களின் தவறல்ல அரசியல்வாதிகளின் தவறு. எமது நாட்டின் அரசியல் செயற்பாடுகள் அந்த நிலையினை ஏற்படுத்தியுள்ளது. 2018ம் ஆண்டு 52 நாள் அரசாங்கத்தின் செயற்பாடுகள், பாராளுமன்றத்தில் செயற்பட்ட விதம் ஆகியவை இளைஞர்களின் வெறுப்பினை மேலும் தீவிரப்படுத்தியது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தியவன்னா ஆற்றில் தள்ள வேண்டும் என்று குறிப்பிட்டல் பாராளுமன்ற உறுப்பினர்களை ஆற்றில் தள்ளினால் ஆறும், சுற்று சூழலுமே பாதிக்கப்படும்.

தவறுகளை திருத்திக்கொண்டு அரசியலில் ஒன்றினைய இளைஞர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சியில் இம்முறை புதிய இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை முடிந்தவரையில் நிறைவேற்றினோம். பல விடயங்களை வெற்றிகொள்ள முடியாமல் போனது அதற்கு அரசியல் ரீதியான காரணிகள் செல்வாக்கு செலுத்தின.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் மற்றும் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதரம் ஆகியவற்றை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் முறையான கொள்கை திட்டங்கள் கிடையாது. கொவிட் தாக்கம் இரண்டாம் சுற்றாக மாற்றமடைந்தால் நாட்டில் வேலையில்லா பிரச்சினை தோற்றம் பெறும், அத்துடன் தேசிய பொருளாதாரமும் மேலும் வீழ்ச்சியடையும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிகொள்ள வேண்டுமாயின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பலமான கொள்கைத்திட்டம் வகுக்க வேண்டும். அரசியல் காரணிகளை விடுத்து ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் ஒன்றினைந்து ஒருமித்த கொள்கை திட்டத்தை வகுக்க வேண்டும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் எம்மை விட பாதிக்கப்பட்ட நாடுகள் பொருளாதார மட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன. அந்நாடுகளில் நெருக்கடி நிலையில் அரசியல் காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை.

பொருளாதாரம், கொவிட்-19 வைரஸ் தாக்கம் ஆகிய சவால்களை கட்டுப்படுத்த வேண்டுமாயின் முறையான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். புதிய கொள்கைத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கு இளைஞர் யுவதிகள் அரசியலில் பங்குப்பற்ற வேண்டும் ஐக்கிய தேசிய கட்சி புதிய தலைமுறையினருக்கு அரசியலில் முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அதனை முறையாக பயன்படுத்திக் கொள்வது இளைஞர்களின் பொறுப்பு என்றார்.

No comments:

Post a Comment