இவ்வாண்டின் முதல் 15 நாட்களில் நாடளாவிய ரீதியில் கடுமையான வன்கொடுமை சம்பவங்கள் பதிவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 22, 2020

இவ்வாண்டின் முதல் 15 நாட்களில் நாடளாவிய ரீதியில் கடுமையான வன்கொடுமை சம்பவங்கள் பதிவு

உலக குழந்தைகள் மீதான வன்கொடுமை ...
(நா.தனுஜா)

இவ்வாண்டின் முதல் 15 நாட்களில் நாடளாவிய ரீதியிலுள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுகளிலும் 140 இற்கும் அதிகமான வன்புணர்வுச் சம்பவங்களும், 42 மோசமான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும், 54 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களும் பதிவாகியிருப்பதாக சிறுவர் மீதான வன்கொடுமைத் தடுப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது. 

இந்த எண்ணிக்கை கடந்த 7 மாத காலத்தில் பலமடங்கு அதிகரித்திருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதன்படி 2020 ஆம் ஆண்டின் ஆறரை மாத காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 5,242 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் 1,642 பதிவாகியிருக்கின்றன. 

2017 ஆம் ஆண்டு முடிவில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சுமார் 17,000 இற்கும் அதிகமான சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் காணப்பட்டதாகவும் அது அதற்கு முன்னரான 10 வருடகாலப் பகுதியில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் என்றும் குறிப்பிட்டிருக்கும் சிறுவர் மீதான வன்கொடுமைத் தடுப்பு அமைப்பு 2018 ஆம் ஆண்டின் இறுதியில் அந்த எண்ணிக்கை 20,000 வரையில் உயர்வடைந்திருக்கும் என்றும் கூறியிருக்கிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில் இலங்கையில் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டிருந்ததோடு, சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குற்றச் செயல்கள் என்பன விசனத்தை ஏற்படுத்தும் வேகத்தில் அதிகரித்து வருவதுடன், ஒன்றைவிட மற்றொன்று மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது. கடந்த வாரத்தில் மாத்திரம் இத்தகைய துஷ்பிரயோகச் சம்பவங்கள் மூன்று பதிவாகியிருந்தன.

பலாங்கொடையில் 17 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டமை, புத்தளத்தில் 10 வயதுச் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் நீர்கொழும்பில் 16 மாத குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் என்பவையே அவையாகும். 

இத்தகைய சூழ்நிலையில் நாட்டின் பொறுப்பு வாய்ந்த பிரஜைகள் என்ற அடிப்படையில், இது குறித்து விரிவாக கலந்துரையாடி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியமாகும் என்று சிறுவர் மீதான வன்கொடுமைத் தடுப்பு அமைப்பின் தலைவர் கலாநிதி ருஷ் விக்ரமநாயக வலியுறுத்தியிருக்கிறார்.

அந்த வகையில் இவ்வமைப்பினால் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தமது பேஸ்புக் பக்கத்தில் இவ்விடயம் தொடர்பான பகிரங்க மக்கள் விவாதமொன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த விவாதத்தில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment