(இராஜதுரை ஹஷான்)
உலகக் கிண்ண இறுதி போட்டி தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த குறிப்பிட்டுள்ள சர்ச்சைக்குரிய செய்தி தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைக் கொண்டு எத்தரப்பினரையும் குற்றவாளிகளாக சுட்டிக்காட்ட முடியாது. எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமான முறையில் விசாரணை நடவடிக்கை இடம்பெறுகின்றது என கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கல்வியமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 2011ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் வெற்றியை இலங்கை அணி இந்நியாவுக்கு தாரைவார்த்தாக அப்போதைய காலகட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வகித்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்ட செய்தி அனைத்து தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்து பாரதூரமானது.
இவர் குறிப்பிட்டதை போன்று 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியின் வெற்றி விற்கப்பட்டது என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் அறியவில்லை. அத்துடன் அக்காலக்கட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் எத்தரப்பினரும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை சந்தேகத்தின் அடிப்படையில் கூட முன்வைக்கவில்லை.
மஹிந்தானந்த அளுத்கமகே சர்ச்சையை ஏற்படுத்தும் வித்ததில் குறிப்பிட்ட செய்தியை தொடர்ந்து அக்காலக்கட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சில் சேவையாற்றிய உயர்மட்ட அதிகாரிகளையும் தனிப்பட்ட முறையில் இவ்விடயம் தொடர்பில் வினவினேன் அவர்களும் ஆட்டநிர்ணயம் காட்டிக் கொடுக்கப்படவில்லை என்றே குறிப்பிட்டார்கள்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பிலும் ஐ.சி.சியிலும் விசாரித்தேன் அவர்களும் எவ்வித முறைப்பாடுகளும் இவ்வாறு கிடைக்கப் பெறவில்லை என்றே குறிப்பிட்டார்கள். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சில் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணை நடவடிக்கைகள் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லாமல் சுயாதீமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. என்றார்.
No comments:
Post a Comment