(எம்.எம். சில்வெஸ்டர்)
இந்நாட்டில் காணப்படும் சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, சாதாரண பொதுமக்கள் மீது அத்துமீறியும், அரசியல் ஆதிக்கம் கொண்டவர்கள் மீது கண்டுகொள்ளாமலும் இலங்கை பொலிஸார் செயற்படுவதாக இளம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான சட்டத்தரணி மீகாரா டொஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இளம் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் கொழும்பு - 10, மருதானையில் அமைந்துள்ள சீ.எஸ்.ஆர். நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், '2020 ஜூன் மாதம் 9 ஆம் திகதியன்று காலி வீதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக நடத்தப்பட்ட அமைதி வழி போராட்டத்தை பொலிஸார் கலவரமாக மாற்றினர்.
ஆர்பாட்டமொன்றை நிறுத்துவதானால், பொலிஸார் நீதிமன்ற ஆணையொன்றை பெற்றிக்க வேண்டும். அதை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடம் காண்பித்தால், ஏற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட வேண்டும். அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடாத பட்சத்தில், அவர்களுக்கு வாய்மொழியில் பேசியிருக்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அடித்து சட்டத்துக்கு முரணான வகையில் அடித்திழுத்து அவர்களை கண்டபடி பொலிஸ் ஜீப்புக்குள் போடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், எதற்காக இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்கிறீர்கள் என்ற பொலிஸாரிடம் வினவிய எமது இளம் வழக்கறிஞரான சுவஸ்திக்கா ஆறுலிங்கத்தை பொலிஸார் அவரை பெண் என்று கூட பார்க்காமல் ஜீப் வண்டிக்குள் தூக்கிப் போட்டனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்நாட்டில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. நாட்டில் சட்ட ஒழுங்குகளை பாதுகாத்து நடக்க வேண்டிய பொலிஸார் அந்த சட் ஒழுங்குகளை மீறியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது.
அதுவும் இந்நாட்டிலுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துக் கூறும் உரிமையில் அடிப்படையில் நடத்தப்பட்ட அமைதியான போராட்டமாகும். இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமானால் பொலிஸார் நீதிமன்ற ஆணையை பெற்று நிறுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து அராஜகமாக மக்களை அடித்து இழுத்து கைது செய்வது சட்டத்துக்கு முரணானது.
இந்நாட்டில் காணப்படும் சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது சாதாரண பொதுமக்கள் மீது அத்துமீறியும் அரசியல் ஆதிக்கம் கொண்டவர்கள் மீது கண்டுகொள்ளாமலும் பொலிஸார் செயற்படுகின்றனர்' என்றார்.
'உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான இளம் வழக்கறிஞரான இஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்து 60 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாமல் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
மேலும் அண்மையில் அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் குறித்து பொலிஸாரிடம் கேள்வி எழுப்பிய எமது மற்றொரு இளம் வழக்கறிஞரான சுவஸ்திக்கா ஆறுலிங்கத்தை பொலிஸ் ஜிப்புக்குள் தூக்கி போட்டமை போன்றமை கண்டிக்கத்தக்கது.
சட்டம் படித்த எங்களுக்கே இந்நிலை என்றால் சாதாரண பொதுமக்கள் மீது எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என அச்சங்கத்தின் உறுப்பினரான வழக்கறிஞர் ஜயன்த்த தெய்ஹத்தகே இந்த ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பினார்.
'மேலும் ஆர்ப்பாட்டங்கள் மூலமே மக்கள் தத்தமது உரிமைகளை பெற்றுக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. குறிப்பாக 8 மணி நேர வேலையைக் குறிப்பிடலாம். இதன் காரணமாக அமெரிக்கா பொலிஸார் ஒருவரால் ஜோர்ஜ் பிளொய்ட் கொலை செய்யப்பட்டமைக்கு கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அதன்படி இங்கும் அமைதி வழியாகவும் சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் தமது அதிகாரத்தையும் சட்டத்தையும் மீறி செயற்பட்டுள்ளனர்' என்றார்.
No comments:
Post a Comment