(இராஜதுரை ஹஷான்)
நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் முரண்பட்ட விதத்தில் செயற்பட்டதன் காரணமாக நாட்டின் அபிவிருத்தி பணிகள் துரிதகரமாக முன்னெடுக்கப்படவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருந்தால் மாத்திரமே சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல முடியும். அதற்கமைய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படும் நிலையான அரசாங்கம் தோற்றுவிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
குருணாகல் கிரியாகல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் முரண்பட்ட விதமாகவே செயற்பட்டார்கள். இவர்களின் செயற்பாடுகளினால் அமைச்சரவை பலவீனமடைந்தது. அதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நிர்மாண பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படவில்லை மாறாக காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். வகுக்கப்படும் கொள்கை ஒருமித்தமாக காணப்பட்டால் மாத்திரமே இரு தலைவர்களும் இணைந்து அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல முடியும். ஆகவே ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறுதல் அவசியமாகும்.
வடமத்திய அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி பணிகளை மேற்பார்வை செய்த போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், வடமத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்புக்கான அடிக்கல் எமது அரசாங்கத்தின் காலத்தில் நாட்டப்பட்டது. கடந்த அரசாங்கமே அபிவிருத்த்தி நிர்மாண பணிகளை முன்னெடுத்தது. இருப்பினும் பணிகள் துரிதப்படுத்தப்படவில்லை.
அபிவிருத்தி நிர்மாண பணிகள் ஒப்பந்தகாரர்களுக்கு உரிய நிதியை வழங்காததன் காரணமாக அபிவிருத்தி பணிகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒப்பந்தகார்களுக்கு நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது வெகுவிரைவில் வட மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment