மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஆயிரம் ரூபா. எனவே, ஆயிரம் ரூபா பற்றி மாத்திரம் கதைத்து ஏனைய பிரச்சினைகளை மூடி மறைப்பதற்கு நாமே வழி ஏற்படுத்திக் கொடுக்காமல் முன்நோக்கி பயணிப்பதற்கான வழிமுறைகளைத் தேட வேண்டும். அதற்கான நிறைய வழிமுறைகள் உள்ளன - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் வேலாயுதம் தினேஷ் குமார் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட இளைஞர்கள் சிலருடன் இன்று (21.06.2020) காலை நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "2015 ஆம் ஆண்டிலிருந்து 5 வருடங்களாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பில் எம் சமூகத்தில் கருத்தாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. சில தேர்தல்களின்போது அதுவே பிரதான பிரசார பொருளாகவும் மாறியிருந்தது. ஆனால், இன்னமும் உறுதியான தீர்வு கிட்டவில்லை. எமது மக்களுக்கு ஆயிரம் ரூபாவுக்கு மேல் கிடைக்கவேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடும்கூட.
ஆரம்ப காலகட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலில் சுமார் 10 லட்சம் பேர் வேலை செய்தனர். இன்று அத்தொகை ஒரு லட்சத்து 80 ஆயிரமாக குறைவடைந்துள்ளது. எனவே, தொழிலாளர்களுக்கு பொருளாதார நிலைமைக்கேற்ப நியாயமான சம்பளம் வழங்கப்படாவிட்டால் இத்துறை வீழ்ச்சியை நோக்கி செல்லும் ஆபத்து இருக்கின்றது. ஆகவே, பெருந்தோட்டத் தொழில்துறையை மீள கட்டியெழுப்புவது பற்றி கவனம் செலுத்தப்படவேண்டும்.
மறுபுறத்தில் எமக்கான அரசியல் உரிமைகள் பற்றியும், இருப்பு சம்பந்தமாகவும் கவனம் செலுத்த வேண்டும். ஆயிரம் ரூபாவுக்காக குரல் கொடுப்பதுபோல், ஏனைய பிரச்சினைகள் சம்பந்தமாகவும் சமூகவலைத்தளங்களில் கருத்தாடல்கள் இடம்பெறவேண்டும்.
குறிப்பாக மலையக மக்களுக்கான பல்கலைக்கழகம், அரச தொழில்வாய்ப்புகள், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குதல், தொழில் பயிற்சி நிலையங்களில் விசேட ஒதுக்கீடு, மலையக தேசியம் ஆகியன தொடர்பிலும் கவனம் செலுத்தி அவை பற்றியும் கதைக்க வேண்டும்.
இலங்கையில் நிறைய தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. ஆனால், உயர்தரப்பரீட்சை முடிவடைந்து, பல்கலைக்கழகம் செல்லாவிட்டால், எல்லாம் முடிந்துவிட்டது என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். உண்மை அவ்வாறு அல்ல, தொழில்நுட்பட மற்றும் தொழிற்பயிற்சி கல்லூரிகள் உள்ளன. அவற்றில் இணைந்தால் காலப்போக்கில் சொந்தக்காலில் நிற்கும் நிலைமை உருவாகும். அவ்வாறு அல்லாவிட்டால் நல்ல சம்பளத்துக்கு தொழில் கிடைக்கும். வெளிநாடுகளுக்குகூட அங்கீகாரத்துடன் செல்லலாம்.
ஆனால், சாதாரண தரம், உயர்தரம் முடிவடைந்ததும் கூலித் தொழிலுக்குதான் கொழும்புக்கு செல்லவேண்டும் என்ற நிலை மாறவேண்டும். எமது இளைஞர்களின் இந்த எண்ணத்தை மாற்றவேண்டும். தற்போது சமூகத்தில் உள்ளவர்கள் வழிகாட்டல்களை மேற்கொள்ளவேண்டும்.
எமது ஐக்கிய மக்கள் சக்தியிடம் பல திட்டங்கள் உள்ளன. மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் நாமும் யோசனைகளை முன்வைத்துள்ளோம். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணப்படும் என்பதுடன், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் முன்வைக்கப்படும் " - என்றார்.
No comments:
Post a Comment