சடலங்களை தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஜூனில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 20, 2020

சடலங்களை தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஜூனில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

(எம்.எப்.எம்.பஸீர்) 

கொவிட்19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என்ற சுகாதார அமைச்சரின் வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது. 

கொவிட்19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னிஆரச்சியினால் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2170/8 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 6 மனுக்களையே இவ்வாறு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மனைக்கப்பட்டுள்ளது. 

உயர் நீதிமன்ற நீதியரசர்களான மூர்து பெர்னாண்டோ, எஸ்.துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் இது தொடர்பிலான தீர்மானத்தை இன்று அறிவித்தனர். 

இன்றைய தினம் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாக, இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 

ஏற்கனவே இந்த விடயம் தொடர்பிலான மேலும் இரண்டு வழக்குகள் பரிசீலனைக்காக எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளமை இதன் போது தெரியவந்ததுடன், அதன்படி இன்று பரிசீலனைக்கு வந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தாக்கல் செய்த 4 மனுக்களுடன் சேர்த்து மொத்தமாக 6 மனுக்களையும் ஜூன் 8 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

No comments:

Post a Comment