சர்வதேச நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்குபற்றிய நேரடி வீடியோ மாநாடு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 2, 2020

சர்வதேச நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்குபற்றிய நேரடி வீடியோ மாநாடு

நாட்டில் கொரோனா வைரஸ் ஒழிப்பு மற்றும் அதற்கான எதிர்கால திட்டங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்குபற்றிய நேரடி வீடியோ மாநாடொன்று இடம்பெற்றது.

இதில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் கலந்து கொண்டார்.

கொரோனா வைரஸ் ஒழிப்பு, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல், முறையான சிகிச்சைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

கொழும்பிலுள்ள உலக சுகாதார அமைப்பின் வதிவிட பிரதிநிதியின் அலுவலகத்திலிருந்து இணையத்தின் ஊடாக இந்தப் பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.

15 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த விசேட காணொளி பேச்சுவார்த்தையில் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் அந்த நாடுகள் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் மற்றும் அனுபவங்கள் தொடர்பிலும் வைரஸ் தொடர்பான சிகிச்சை முறைமைகளை பலப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இலங்கையில் கொரோனா வைரஸ் ஒழிப்பு வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் இதுவரை அரசாங்கம் அதற்காக மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பாதுகாப்பு முறைமைகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

இலவச சுகாதார சேவை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இலங்கையில் வைரஸ் ஒழிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் மிக சாத்தியமாக அமைந்துள்ளதாகவும் உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் மேற்படி வைரஸ் ஒழிப்பு சம்பந்தமாக தாமதமான தீர்மானங்களை மேற்கொண்டுள்ள போதிலும் இலங்கை உரிய காலத்தில் முறையான தீர்மானங்களை மேற்கொண்டதால் மேற்படி வைரஸ் பரவலை பெருமளவு கட்டுப்படுத்துவதற்கு முடிந்துள்ளதாகவும் சர்வதேச நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியான டொக்டர் ராசியா பெண்டசே, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனக சந்திரகுப்த, தொற்று நோய் ஒழிப்புப் பிரிவு பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் டொக்டர் அஜித் மெண்டிஸ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment