வாகனேரியில் பொதுமக்கள் மீது தாக்குதல், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பேன் முன்னாள் எம்.பி. வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Friday, May 29, 2020

வாகனேரியில் பொதுமக்கள் மீது தாக்குதல், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பேன் முன்னாள் எம்.பி. வியாழேந்திரன்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி குளத்துமடுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களைத் தடுத்தவர்கள் மீது வியாழக்கிழமை மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தாக்குதல்களை நடாத்தியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

வாகனேரி பகுதியில் ஓட்டமாவடி, காவத்தமுனையைச் சேர்ந்தவர்களினால் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து பிரதேச மக்களினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது.

வாகனேரி, குளத்துமடுப் பகுதியில் மண் ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரத்தினை வகுளாவலை சந்தியில் பொதுமக்கள் மறித்து, ஏற்றி வந்த மண்ணை பறித்ததுடன், அதன் பின்னர் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றி வந்தவர்களின் மண்ணை பறிமுதல் செய்யச் சென்ற வேளை, ஏற்பட்ட வாக்குவாதத்தில் உழவு இயந்திரத்தில் வந்தவர்களால் பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவத்திலேயே பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில், பதினொரு நபர்கள் தாக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்கள், ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதிலொருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

இதில், எஸ்.பாலகுமார் என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், ஏ.சிவகுரு, எஸ்.மகேஸ்வரி ஆகிய இருவரும் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ச்சியாக வாகனேரி பகுதியில் மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வாகனேரி பிரதேச மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட நிலையில் மண் அகழ்வில் ஈடுபடுபவர்களால் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஓட்டமாவடி, காவத்தமுனையைச் சேர்ந்தவர்கள் மேலும் ஒரு உழவு இயந்திரத்தில் வந்து அப்பகுதி மக்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்ற வாகனேரி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சிவகுரு மேற்படி குழுவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டதுடன், சம்பவம் இடம்பெற்ற மண் அகழ்வு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் மற்றும் பொதுமக்களுடன் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இதில், ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன், எஸ்.கிருபாகரன் ஆகியோர் விஜயம் மேற்கொண்டு நிலைமைகளைப் பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment