பண்டாரகம - அட்டுளுகமையில் நடந்தது என்ன...? : அத தெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேற்றம் - News View

Breaking

Post Top Ad

Monday, May 25, 2020

பண்டாரகம - அட்டுளுகமையில் நடந்தது என்ன...? : அத தெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேற்றம்

ஐ. ஏ. காதிர் கான்

பண்டாரகம - அட்டுளுகமை பிரதேசத்தில் (24) நோன்புப் பெருநாள் தினத்தன்று, அததெரண ஊடகவியலாளரைத் தாக்கிய வழக்கு கடுமையான வாதப்பிரதிவாதங்களின் பின்னர், இன்று (26) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்புப் பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்கக் கடமைகளைச் செய்தமையை யாவரும் அறிவர்.

பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்த நிலையில், ஊர்மக்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லாமலும், வீதியில் அலைந்து திரிந்து கொண்டிருக்காமலும் நோன்புப் பெருநாள் தொழுகையை வீட்டிலேயே நிறைவேற்றினார்கள் என்பதே உண்மை.

இவ்வாறான நிலையில், அட்டுளுகமை பிரதேசத்தில் முஸ்லிம்கள் வீட்டில் இருந்தவாறு பெருநாளைக் கொண்டாடுகின்றார்கள் என்பதை ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் முகமாக பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் நஜீம் ஹாஜியார், தெரண ஊடகவியலாளரை அப் பிரதேசத்துக்கு வரவழைத்துள்ளார். 

அங்கு சென்ற அவர் தலைவரின் நேர்காணலை முடித்துக்கொண்டு செல்லும் வழியில், அநாவசியமாக ஊரில் உள்ள மேலும் பல பள்ளிவாசல்களையும் படம் பிடித்துள்ளார். தான் ஓர் ஊடகவியலாளர் என்பதை அடையாளப்படுத்தும் எந்தவொரு அடையாள அட்டையோ அல்லது ஆவணமோ காட்சிப்படுத்தாத நிலையில் குறித்த பள்ளிவாசல்களைப் படம் பிடித்துள்ளார். 

இதனை அவதானித்த ஊர்மக்கள், அவரிடம் "எதற்காக பள்ளிவாசல்களை படம் பிடிக்கிறீர்கள்...?" என்று வினவியுள்ளனர். "தான் ஒரு ஊடகவியலாளர்" என்றும், "தனக்கு இங்குள்ள நிலைமைகளைப் படம் பிடிக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார். "ஊர் மக்களின் செயற்பாடுகளைப் படம் பிடிப்பதற்கு பதிலாக, எதற்காக பள்ளிவாசல்களைப் படம் பிடிக்கிறீர்கள்" என்று ஊர் மக்கள் மீண்டும் கேட்டுள்ளனர். இதற்கிடையில், ஊர் மக்கள் அவ்விடத்திற்கு ஒன்றுகூடிய நிலையில், அது வாய்த்தர்க்கமாக மாறியுள்ளது.

இதனையடுத்து குறித்த ஊடகவியலாளர், "தான் செய்தி சேகரிக்கச் சென்றபோது தாக்கப்பட்டதாக" தெரிவித்து, பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார். 

உடனடியாக விரைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், சந்தேகத்தின் பேரில் 5 பேரைக் கைது செய்துள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் (25.05.2020) பாணந்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, இன்று (26) வரை விளக்க மறியலில் வைக்குமாறு, பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி றமீஸ் பஷீர், "இணக்கப்பாட்டுடன் நிறைவு செய்யும் வழக்கொன்றுக்கு அடையாள அணிவகுப்பு தேவை இல்லை" என்றும், சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறும் பதில் நீதவானிடம் கோரியுள்ளார்.

குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக பல்வேறு போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பொலிஸார், இதற்குத் ஆட்சேபனை தெரிவித்து 14 நாட்களுக்குத் தடுத்து வைத்து, விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு கோரியுள்ளனர்.

சுமார் 45 நிமிடங்கள் வரை நடைபெற்ற வாதங்களின் பின்னர், குறித்த வழக்கினை விசாரணை செய்த பதில் நீதவான், சந்தேக நபர்களை, இன்று (26) வரை தடுத்து வைக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, குறித்த செய்தி சேகரிக்கச் சென்ற அததெரண ஊடகவியலாளர், பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் பொய்த் தகவல் (முறைப்பாடு) வழங்கியுள்ள நிலையில், அதனை அததெரண தொலைக்காட்சியும் ஊதிப் பெருப்பித்து, மக்கள் மத்தியில் பொய்யான தகவலை ஒளிபரப்பச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad