கட்டாரிலிருந்து இலங்கை பிரஜைகளை இன்று 26 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறைக்கான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
குவைத்திலிருந்து இலங்கைக்கு கடந்த (19/05) 19 ஆம் திகதி அழைத்துவரப்பட்ட இலங்கை பிரஜைகள் 649 பேரில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்டாரின் டோகா நகரிலிருந்து 273 இலங்கையர்கள் இன்று காலை 5.43 மணியளவில், ஸ்ரீ லங்கா விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் அழைத்துவர ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே தற்போது அந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்ப முடியாமல் கடந்த இரண்டு மாதங்காளாக சிரமங்களுக்கு உள்ளான இலங்கையர் ஒருவர் எமிரேட்ஸ்க்கு சொந்தமான விமானத்தில் நேற்று மாலை 6.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இவர் எமிரேட்ஸ் ஏயார்லைன்ஸில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியற்றிவரும் நிலையில், மேலதிக பயிற்சிக்காக தென் ஆபிரிக்காவிற்கு சென்றிருந்த போது கொரோனா நெருக்கடி காரணமாக நாடு திரும்ப முடியாது இருந்தார். இதனையடுத்து நேற்று மாலை டுபாயிலிருந்து இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்துள்ளார்.
No comments:
Post a Comment