(செ.தேன்மொழி)
ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்திற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளதால், இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக போலி பிரசாரங்களை முன்னெடுப்பதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, குடும்ப ஆட்சியை மீண்டும் முன்னெடுத்திருக்கும் ராஜபக்ஷாக்களின் ஆட்சியை இல்லாதொழிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அரசாங்கம் உண்மைத் தகவல்களை மறைத்து வருகின்றது. தற்போது வைரஸை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளையும் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அரசாங்கம் கொரேனா வைரஸை யுத்தத்தை வெற்றி கொண்டதாக விழா நடத்துவதையே எதிர்பார்த்திருக்கின்றது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 60 சதவீதமானவர்கள் இராணுவத்தினர்களே. இதற்கு காரணம் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளாகும். யுத்தத்தை வெற்றி கொள்வதற்கே இராணுவ தளபதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆனால் தொற்று நோயை தடுப்பதற்காக வைத்தியர்களே செயற்பட வேண்டும்.
ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் கொரோனா தொற்றை கேலி செய்யும் வகையிலேயே செயற்பட்டது. மூன்று காலங்களையும் பற்றி சிந்திக்கும் தலைவர் என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இது தொடர்பில் பாராளுமன்றத்தில் உறையாற்றினார். அதற்கும் ஆளும் தரப்பினர் கேலி செய்தனர். தற்போது ஆளும் தரப்பினர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டதரப்பினர் மற்றும் இன்னும் சிலர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால், இந்த கொரேனா நெருக்கடியை மேலும் குழப்பகரமாக ஏற்படுத்திருப்பார் என்று அவர்மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஏன் என்றால் இன்று இவர்களுக்கு சஜித் பெரும் சவாலாக மாறியுள்ளார். அவரை வீழ்த்துவதற்கே இவர்கள் தற்போது முயற்சித்து வருகின்றனர். யாரும் கொரேனாவை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக தெரியவில்லை. சஜித்துக்கு சாதாரண மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் சில மறைமுக சக்திகள் அவருக்கு எதிராக செயற்பட்டமையே ஆகும். இதற்கு எமது முகாமைச் சேரந்த சிலரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு எதிராக போட்டியிடுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முடியாத நிலைமையில் யார் போட்யிடுவது தொடர்பில் கேள்வியிருந்தது. பசில் ராஜபக்ஷ தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அவரே அறிவித்திருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை களமிறக்குவதற்காக, வியத்மக குழுவினரும், வெளிச்சம் குழுவினரும் பெரும் பங்காற்றினர். ஆனால் தேர்தலை வெற்றி கொண்டதன் பின்னர் அவர்களுக்கு எந்த வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்திருப்பதாக தெரியவில்லை. அதனால் அனைவரும் வெறுப்புற்று இருக்கின்றனர்.
இதேவேளை வியத்மகவில் இருந்த மோசடியாளர்கள் சிலருக்கு பதவிகளை வழங்கி தம்முடன் இணைத்துக் கொண்டுள்ளனர். இதனால் இந்த ராஜபக்ஷாக்களின் குடும்ப ஆட்சியை இல்லாதொழிப்பதற்காக சஜித் தலைமையில் ஒன்றுகூடியுள்ள எம்முடன் அறிவுபூர்வமான மக்களை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
கோத்தாபய இன்று தலைமைத்துவத்திற்கு பொறுத்தமற்றவராக விளங்குகின்றார். பெயரளவிலே ஜனாதிபதியாக இருக்கின்றார். சிறந்த தலைவராக கோத்தாபயவை களமிறக்கியவர்கள் இன்று, திருப்தியற்று இவ்வாறான ஒருவருக்கா நாட்டின் தலைமைத்துவத்தை வழங்கியுள்ளோம் என்று மனவருத்தத்தில் இருக்கின்றனர். அவர் இன்று யாரோ ஒருவரின் இயக்கத்தில் இயங்கி வருகின்றார். எப்போதாவது ஊடகத்திறகு முன் கலந்துரையாடினாலும் அதனை ஆரம்பத்திலே திட்டமிட்டுள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளது ஆனால் சலுகைகள் மக்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் பருப்பு மற்றும் டின் மீனின் விலையை குறைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதுவும் நடைமுறை சாத்தியமாகவில்லை. எல்லோரும் கோத்தாபய அமைதியாக செயலாற்றுபவர் என்று காண்பிக்க முற்பட்டனர். அமைதியாக அவர் எதனை சாதித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் மாத்திரமல்ல அவரைச் சுற்றி நிபுணர்கள, வைத்தியர்கள், சட்டதரணிகள், ஆசிரியர்கள் வர்த்தகர்கள் என பலர் இணைந்துள்ளனர். அதனாலேயே எம்மீது போலிப் பிரசாரங்களை பரப்பி வருகின்றனர்.
தேர்தல் காலத்தில் உழைக்கும் போராளிகள் தொடர்பில் பெரும் பிரசாரங்களை செய்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அவர்கள் தொடர்பில் எந்த பயன்தரும் விடயங்களும் செய்தார்களா? தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டு தொழிலாளர்கள் பெரும் ஆவலடன் நாட்டுக்கு அழைத்து வந்தார்கள் தற்போது அவர்களின் நலம் தொடர்பில் சிறிதளவேனும் சிந்திப்பதில்லை.
நல்லாட்சி அரசாங்கத்திலே அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. அதனையும் மறந்து அரச ஊழியர்கள் கோத்தாபயவுக்கு ஆதவளித்திருந்தனர். தற்போது போராசிரியர் பி.பீ.ஜயசுந்தர அவர்களது ஊதியத்தை அறவிடுவதாக தெரிவித்தன் பின்னரே, அரச ஊழியர்களுக்கு எங்களை நினைவில் வந்திருக்கின்றது. அதனால் இவருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். இதனால் நன்கு சிந்தித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு பொதுத் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்றுக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment