ஆறுமுன் தொண்டமானின் இடத்திற்கு மகன் ஜீவன் தொண்டமான் - நுவரெலியா மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்படுவார் - தேர்தலின் பின் தலைமைத்துவம் தொடர்பில் முடிவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 27, 2020

ஆறுமுன் தொண்டமானின் இடத்திற்கு மகன் ஜீவன் தொண்டமான் - நுவரெலியா மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்படுவார் - தேர்தலின் பின் தலைமைத்துவம் தொடர்பில் முடிவு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, அவரது மகன் ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

நேற்று (27) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம். ரமேஷ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், சக்திவேல், பிலிப்குமார், இ.தொ.கா முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்ததாவது, "தான் இல்லாத காலகட்டத்திலும் கட்சி, தொழிற்சங்க நடவடிக்கைகள் மக்களுக்காக தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் என தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா எம்மிடம் பல தடவைகள் கூறியிருந்தார்.

இதன்படி காங்கிரஸின் உயர்மட்டக்குழு இன்றுகூடி, அடுத்தக்கட்ட நடவடிக்கை சம்பந்தமாக ஆராய்ந்தது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் அந்த இடத்துக்கு ஜீவன் தொண்டமானை நியமிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா காலமான பின்னர் கட்சி தலைமைத்துவம் சுமார் ஒருவருடம் வரை வெற்றிடமாக இருந்தது. எனவே, தேர்தல் முடிவடைந்த பின்னரே கட்சியின் தொண்டர்கள், உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அது சம்பந்தமாக தேசிய சபை முடிவெடுக்கும்.

தலைவரின் மறைவையடுத்து இரங்கல் தெரிவிப்பதற்காக பிரதமர் எம்மை இன்று (நேற்று) அழைத்திருந்தார். இதன்படி சென்றோம். பொதுச்செயலாளரின் கையொப்பத்துடன் ஜீவன் தொண்டமானை போட்டியிட எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தோம். சிறந்த முடிவு என பிரதமரும் கூறினார்.

ஐயா சௌமியமூர்த்தி தொண்டமான், தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் கொள்கைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் மக்களுக்கு தொடர்ந்தும் சேவைகளை வழங்கும்." என்றார்.

No comments:

Post a Comment