(எம்.எப்.எம்.பஸீர்)
2020 பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ள மனுதாரர்களும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஒன்றாக இணைந்து பொதுத் தேர்தலை பிற்போட முயல்கின்றனரா என எண்ணத் தோன்றியுத்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா நேற்று உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் சார்பில் மன்றில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களும் மனுதாரர் தரப்பின் வாதங்களும் இவ்வெண்ணத்தை தோற்றுவிப்பதாக அவர் வாதிட்டார்.
ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் நேற்று 7 ஆவது நாளாகவும் மன்றில் பரிசீலிக்கப்பட்டது.
பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்றின் 501 ஆம் இலக்க அறையான உயர் நீதிமன்ற சம்பிரதாய அமர்வு நிகழ்வுகள் மண்டப அறையில் இவை பரிசீலனைக்கு வந்தன.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மேலதிக சொலிசீட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி இந்திகா தேமுனி டி சில்வா வாதங்களை தொடர்ந்த நிலையில் நேற்று முற்பகலும் அவரது வாதங்கள் சிறிது நேரம் தொடர்ந்தன.
குறிப்பாக ஜனாதிபதியின் பாராளுமன்றத்தை கலைத்த மார்ச் 2 ஆம் திகதி வர்த்தமானி சட்ட வலுவுள்ளதே என்பதை மையப்படுத்தி அவரது வாதங்கள் அமைந்தன. இதனைத் தொடர்ந்து மனுதாரர்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட முன்னர், மன்ரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 13 இடையீட்டு மனுக்கள் தொடர்பிலும் இடையீட்டு மனுதாரர்களுக்கு வாதங்களை முன்வைக்க சந்தர்ப்பம் நீதியரசர்களால் வழங்கப்பட்டது.
இந்நிலையில் முதலில் பேராசிரியல் பண்டுல எந்தகம முன்வைத்த இடையீட்டு மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா வாதிட்டார்.
'பாராளுமன்றத்தை கலைத்து 3 மாதங்களுக்குள் தேர்தலை நடாத்த வேண்டும் என்று எந்த சட்ட வியாக்கியானங்களும் இல்லை. அத்துடன் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் ஒன்றினை மீள கூட்ட அரசியலமைப்பில் எந்த இடமும் இல்லை. தேர்தல்கள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க எந்த தடையும் இல்லை என முதல் நாளன்றே உயர் நீதிமன்றம் தெரிவித்தது. எனினும் தேர்தல்கள் குறித்து திகதியை தீர்மானிக்கவும் விருப்பு இலக்கங்களை வழங்கவும் தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதிலிருந்து மனுதாரர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலை பிற்போட முயல்கின்றனரா என எண்ணத் தோன்றுகின்றது.' என வாதிட்டார்.
இதனையடுத்து ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்தினுடைய இடையீட்டு மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ச உயர் நீதிமன்றில் விடயங்களை தெளிவுபடுத்தினார்.
அரசியலமைப்பையும் தேர்தல் சட்டங்களையும் தேர்தல் ஆணைக்குழு மீறியுள்ளதாக அறிவித்து பொருத்தமான உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச தனது வாதத்தின் போது கூறினார்.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் சமூக பொறுப்பை கவனத்திற்கொள்ளாமல், நீதிமன்றத்தில் எதிர்மறையான கருத்துக்களைக் முன்வைக்கின்றனர். நியாயமான பக்கச்சார்பற்ற தேர்தலொன்று உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டாலும் அதன் உறுப்பினர்களுக்கு இடையில் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலைமையினால் நீதிமன்றுக்கு வந்து எதிர்மறையான கருத்துக்களை அவர்கள் கூறுகின்றனர். இது வெட்கப்பட வேண்டிய நிலைமை. ஆணைக்குழுவின் சில உறுப்பினர்கள் தமது பொறுப்பை உணர்ந்துகொள்ளாமல் இருக்கின்றனர்.' என வாதிட்டார்.
இதேவேளை, சிவில் செயற்பாட்டாளர் ஜீவன் தியாகராஜாவின் இடையீட்டு மனு சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா, பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் கீழ் விதிமுறைகளை விடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளதென சுட்டிக்காட்டினார். அதன் பிரகாரம், பாராளுமன்றத்தைக் கூட்டி தேர்தல் தொடர்பாக புதிய சட்டத்தை இயற்றும் தேவை இல்லை என அவர் வாதிட்டார்.
இந்நிலையில் உயர் நீதிமன்றின் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டன. மனுதாரர் தரப்பு வாதங்கள், பிரதிவாதிகள் தரப்பு வாதங்கள் தர்போது நிறைவடைந்துள்ள நிலையில் இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான வாதங்கள் நேற்று ஆரம்பிக்கப்பட்டு அவை தொடர்கின்றன. இன்று இம்மனுக்கள் 8 ஆவது நாளாகவும் பரிசீலனைக்கு வருகின்றன.
No comments:
Post a Comment