(செ.தேன்மொழி)
சடலங்களுக்கு மத்தியில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன ராஜ கருணா, ஜனநாயகத்தை போற்றும் தலைவர் என்றால் அரசியலமைப்பில் காணப்படும் சிக்கல் தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் ஆலோசனையை பெற்றுக் கொண்டு அதற்கமைய செயற்படுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது, தொழிலாளர்களின் தினமான இன்றைய தினம் நாம் ஏனைய தினங்களை போல் இன்றி வீடுகளில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வழமையாக தொழிலாளர் தினங்களில் நாம் வீதிகளிலே இருப்போம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை அதனை செயற்படுத்த முடியாமல் போயுள்ளது.
ஆனால் தொழிலாளர்களது நலன் தொடர்பில் நாம் சிந்திப்போமானால், தொழிலாளர்களுக்கு அவர்களது தொழில் பாதுகாக்கப்படுகின்றமையே பெரும் நலனாகும். இந்த கொரோனா வைரஸ் பரவலினால் 30 வீதமானவர்களது தொழில் இல்லாமல் போகும் வாய்ப்பிருப்பதாக பல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஏனைய நாடுகள் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஆனால் இலங்கை அரசாங்கம் எத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. அந்நிலையில் இவ்வாறு தொழில் இல்லாமல் போகும் வாய்ப்பிருப்பவர்களுக்கு முறையான சலுகையை பெற்றுக் கொடுப்பதற்கு இப்போதிருந்தே ஆயத்தமாக வேண்டும்.
தற்போது வழங்கப்படும் 5000 ரூபாய் போன்றில்லாது முறையான சலுகையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு 40 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னும் அந்த 5000 ரூபாய் முழுமையாக கையள்ளிக்கப்படவில்லை. இந்த 5000 ரூபாய் 40 நாட்கள் வரை ஒரு குடும்பத்தின் செலவுக்கு போதுமானதாக அமையாது. 40 நாட்களுக்கு 5000 ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு 125 ரூபாவாகவே வகுக்கப்பட்டுள்ளது. 125 ரூபாய் நாள் ஒன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு போதுமானதா? அதனால் ஒரு வாரத்திற்கு 5000 ஆயிரம் ரூபாய் என்று பகிர்தளிக்கப்பட வேண்டும். ஏனைய நாடுகளில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தற்போது பல கோடி ரூபாய் நிதி கிடைக்கப் பெற்றுள்ளன. அதனால் இவற்றைக்கொண்டு மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியும். இதேவேளை பகிர்ந்தளிப்பதை காலங்கடத்தாமல் உடனே செய்ய வேண்டும். நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால் பாராளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும். பாராளுமன்றத்தை கூட்டுவதால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம், கொடுப்பனவு என்பன வழங்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே மிக முக்கியமாகும்.
அரசாங்கத்தின் செயற்பாட்டினால் நாட்டுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று எண்ணியிருப்பவர்கள் அதனை பெற்றுக் கொடுக்காமலே விட்டு விடுவார்கள், 51 நாள் அரசியல் நெருக்கடியின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஜனநாயகத்தை மீறி செயற்பட்டதனால் சர்வதேசத்தின் மத்தியில் எமது நாட்டுக்கு தலைக்குனிவு ஏற்பட்டது. இந்த நிலைமையை மீண்டும் தோற்றுவிக்க வேண்டாம்.
இதேவேளை கொரோனா வைரஸ் உடன் அரசியலமைப்பு திருத்தத்தையும் தொடர்புபடுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்காதீர்கள். கொரோனா பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது பெரும் பாதிப்புகளை தோற்றுவிக்கும் என்று உலக நாடுகளும் எச்சரித்துள்ளன. இந்நிலையில் நாங்கள் எதாவது கருத்து தெரிவித்தால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை அரசியலாக்க முயற்சிக்கின்றோம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொரேனா பரவல் ஏற்பட்டுள்ள தருணத்திலும் சுகாதார அமைச்சர் மார்ச் 19 ஆகும் போது வைரஸை கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தார். இவையனைத்தும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளே ஆகும். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டும் தேர்தலுக்கு நாடு தயாராக உள்ளது என்பதை எடுத்துக்காட்ட ஊரடங்கை தளர்த்தினார்கள். அதனால் மேலும் பிரச்சினை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாங்களா கொரோனா அச்சுறுத்தல் மத்தியில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கிறோம்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவே நீங்கள்தான் சடலங்களுக்கு மத்தியில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றீர்கள். பாராளுமன்றத்தை கூட்டாது செயற்படுவது அரசியலமைப்புக்கு முரணானது என்று நாங்கள் தெரிவித்து வருகின்ற போதிலும் அரசாங்கம் அவ்வாறு எந்த பிரச்சினையும் இல்லை என்று நிராகரித்து வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் ஜனநாயகத்தை மதிக்கும் தலைவராக இருந்தால் ஜனாதிபதி என்ன செய்ய வேண்டும். உயர் நீதி மன்றத்தை நாடி அதன் ஆலோசனைக்கமைய செயற்பட வேண்டும்.
No comments:
Post a Comment