கொரோனா தொற்று ஏற்பட்டால் முழுப் பொறுப்பையும் சுகாதார வைத்திய அதிகாரியே ஏற்க வேண்டும் - காரைதீவு பிரதேச சபை தவிசாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, May 1, 2020

கொரோனா தொற்று ஏற்பட்டால் முழுப் பொறுப்பையும் சுகாதார வைத்திய அதிகாரியே ஏற்க வேண்டும் - காரைதீவு பிரதேச சபை தவிசாளர்

காரைதீவில் கொரோனாத் தொற்று ஏற்படுமானால் அதற்கான முழுப்பொறுப்பையும் காரைதீவுப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியே ஏற்க வேண்டும்.

இவ்வாறு காரைதீவுப் பிரதேச சபையின் 26ஆவது மாதாந்த அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றபோது உரையாற்றிய தவிசாளர் கே.ஜெயசிறில் காட்டமாகத் தெரிவித்தார்.

முன்னதாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்காக இரு நிமிடநேரம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் ஏழைகளுக்கும் நலிந்தோருக்கும் உதவி செய்வதென்பது தெய்வங்களுக்குச் செய்யும் சேவையாகும். அந்த வகையில் எமது அழைப்பையேற்று எமது பிராந்தியத்தில் பல வழிகளிலும் உதவுகின்ற பரோபகாரிகள், சமுக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எமது சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா எமது பக்கம் வரக்கூடாது என்பதற்காக பிரதேச செயலாளரும் நாங்களும் இரவு பகலாக உழைத்துக் கொண்டுவரும் வேளையில் காரைதீவுக்குரிய சுகாதார வைத்திய அதிகாரி மட்டும் ஒத்துழைக்க மறுக்கிறார்.

உள்ளுர் மீனவர் வர்த்தகர்களின் பொருட்களை சல்லடை போட்டுத் தடை செய்யும் அவர் வெளிப்பிரதேச மீன்கள் வருவதற்கும் குருநாகல் கோழி வருவதற்கும் துணை போகின்றார். வெளிப்பிராந்திய நடமாடும் உணவுப் பொருட்கள் வாகனங்களுக்கு ஊருக்குள் அனுமதியளிக்கிறார்.

ஏனைய பிரதேசங்களில் கிருமிநாசினி சீராக விசிறப்படுகின்றது. ஆனால் காரைதீவில் மக்கள் கூடும் முக்கிய இடங்களுக்கு விசிறப்படவில்லை. ஏன் எமது பிரதேச சபை அலுவலகத்திற்குக் கூட விசிறப்படவில்லை.

இதுபோன்ற பலகாரணங்களால் காரைதீவு கொரோனாத் தொற்றுக்குரிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறதா என அஞ்ச வேண்டியுள்ளது. இவர் தொடர்பாக ஏலவே பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கும் மாகாண பணிப்பாளருக்கும் முறையிட்டிருந்தோம். இது இரண்டாவது தடவை.

எனவே இம்முறை நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மக்கள் போராட்டம் தலையெடுக்கும். அதுமட்டுமல்ல கொரோனாவுக்குரிய முழுப்பொறுப்பையும் அவரே பொறுப்பேற்கவேண்டும் என்றார்.

காரைதீவு குறூப் நிருபர்

No comments:

Post a Comment