9 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை - 117 எனும் தொலைபேசி இலக்கத்தை அழைக்கவும் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 16, 2020

9 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை - 117 எனும் தொலைபேசி இலக்கத்தை அழைக்கவும்

தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து, 09 மாவட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கொழும்பு, கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு முதல் நிலை மஞ்சள் (Level 01) எச்சரிக்கையும் குருணாகல் மாவட்டத்திற்கு இரண்டாம் நிலை செம்மஞ்சள் (Level 02) எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியால காலப்பகுதியினுள் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குருணாகல் மாவட்டத்தில் பொல்கஹவல பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு, இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தில் வத்தேகம பிரதேசத்திலும் இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளை, இரத்தினபுரி, எலபாத்த, நிவித்திகலை, கலவான, கிரிஎல்ல பிரதேசங்களிலும் குருணாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலச்சரிவு மிக்க அபாய வலயங்களில் வசிக்கும் மக்களுக்கு, மேலும் மழை பெய்தால், பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வதற்கு தயாராக இருக்குமாறும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு நிலச்சரிவு, கற்பாறை சரிவு, கற்கள் உருண்டு விழுதல் போன்றவை ஏற்படலாம் எனவும், இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தில் காலி, அக்மீமன, எல்பிட்டிய, நியாகம, நாகொட, தவலம, நெலுவ பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலச்சரிவு அபாயம் மிக்க வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் தவலம பிரதேச செயலகப் பிரிவில் நிலச்சரிவு அபாயம் மிக்க வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொடை, குருவிட்ட, அயகம பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலச்சரிவு அபாயம் மிக்க வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை, பாலிந்தநுவர, புளத்சிங்கள, வலல்லாவிட்ட, ஹொரணை, இங்கிரிய, மத்துகம பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலச்சரிவு அபாயம் மிக்க வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் பிட்டபெத்தற, கொட்பொல பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலச்சரிவு அபாயம் மிக்க வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்கைபுர பிரதேச செயலகப் பிரிவில் நிலச்சரிவு அபாயம் மிக்க வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவில் நிலச்சரிவு அபாயம் மிக்க வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் கங்க - இஹல கோரள, தும்பனே பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலச்சரிவு அபாயம் மிக்க வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் கொவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில், வெள்ளம் நிலைமை ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அனர்த்த் முகாமைத்துவ நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்பதோடு, தங்களது வீடுகளில் வெள்ளம் ஏற்படுமானால், காத்திருக்காமல் பாதுகாப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையின் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அறிவதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment