திண்மக் கழிவு அகற்றுவதற்காக 50 ரூபா அறவீடு, ஒரு சிலர் அரசியல் செய்ய முயற்சி - 100 பேரை வைத்துக் கொண்டு 120 தொன் குப்பை அகற்ற வேண்டியுள்ளது - திண்மக் கழிவுக்கு நாளொன்றுக்கு 435,000 ரூபா செலவு : கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

திண்மக் கழிவு அகற்றுவதற்காக 50 ரூபா அறவீடு, ஒரு சிலர் அரசியல் செய்ய முயற்சி - 100 பேரை வைத்துக் கொண்டு 120 தொன் குப்பை அகற்ற வேண்டியுள்ளது - திண்மக் கழிவுக்கு நாளொன்றுக்கு 435,000 ரூபா செலவு : கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப்

திண்மக் கழிவு அகற்றுவதற்காக, வீட்டுக்கு வாராந்தம் 50 ரூபாய் வரி அறவிடப்படுவது தொடர்பில் ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் அரசியல் செய்ய முற்படுவதாக, கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவு அகற்றப்படுதலுக்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் இன்று (17) முற்பகல் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 2018 மாநகர சபையின் குறைகளை நிவர்த்தி செய்ய குழுவை நியமித்திருந்தோம் அவர்களின் இரகசிய அறிக்கையின் பிரகாரம் திண்ம கழிவு அகற்றும் விடயத்தில் பாரிய சவாலை எதிர்கொண்டோம். எங்களுக்கு ஆளணி பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ளது. நூறு பேரை வைத்துக்கொண்டு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் கல்முனை மாநகரத்தை பயன்படுத்துகின்ற 120 தொன் குப்பை அகற்ற வேண்டிய தேவை இருக்கின்றது.

குப்பைகளை தரம் பிரித்து வழங்க மக்கள் தயார் இல்லை. கல்முனையை 6 வலயமாக பிரித்து அதற்கு மூன்று வாகனங்களை பயன்படுத்தினாலும் 100 தொன் குப்பை அகற்ற வாகன தேவை அவசியமிருக்கிறது.

கிழமைக்கு இரு தரம் வீடுகளுக்கு சென்று திண்மக் கழிவு அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றோம். அரச அலுவலகங்கள் பொதுப்பணித்துறை என்பவற்றில் வரி அறவிடுவதில்லை.

கொரோணா அனர்த்த காலத்தில் தமது உயிரை துச்சமாக நினைத்து ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான ஊழியர்களின் ஊதியமாக 170,000 ரூபா, வாகனங்களின் எரிபொருள் செலவு 125,000 ரூபா நாள் செலவு, வாகன திருத்த செலவு 40,000 ரூபா செலவு என மொத்தமாக ஒரு நாளைக்கு குப்பைகளை முகாமைத்துவம் செய்வதற்கு 435,000 ரூபா செலவு செய்யவேண்டி உள்ளது. இது மாதமொன்றுக்கு ஒரு கோடி 30 இலட்சம் ரூபாவாகும்.

கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, போன்ற பிரதேசங்களில் சுமார் 120,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நாளாந்தம் கல்முனை மாநகர சபைக்கு 30,000 பேர் அளவில் வந்து செல்கின்றனர். ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நாளாந்தம் மாநகர சபையை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகின்றார்கள்.

இதனால் சாதாரண குடியிருப்பாளரிடமிருந்து வாரம் ஒன்றுக்கு 50 ரூபாவை அறவீடு செய்ய சபையினால் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சில உறுப்பினர்கள் தடையாக செயல்படுவது கவலை அளிக்கிறது. சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்கள் மற்றும் ஏழைகளிடத்தில் இதனை நாம் அறவீடு செய்வதில்லை. மாநகரசபை எல்லைக்குள் காணப்படும் வைத்தியசாலை, பிரதேச செயலகங்கள், வணக்கஸ்தலங்கள், திணைக்களங்கள் உட்பட அனைத்து அரச அலுவலகங்களிலும் இலவசமாகவே கழிவுகளை அகற்றி வருகின்றோம். ஏனெனில் அவர்கள் மக்களுக்கான சேவையை செய்கின்றார்கள்.

உள்ளூராட்சி சட்டத்தின் படி வறுமை காலத்தில் தவிர்ந்த ஏனைய காலங்களில் கழிவகற்றலுக்கு கட்டணமாக வழங்குதல் வேண்டும். என்ற திட்டத்தில் திண்மக் கழிவு வரி அறவிடப்படுகிறது.

அநியாயமாக எந்த செலவுகளும் கல்முனை மாநகர சபையில் இடம்பெறவில்லை . வருமான ஆய்வு துறையினர் வரியை ஏன் அறவிடவில்லை என எம்மிடம் கேள்வி கேட்கிறார்கள். ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் அரசியல் செய்ய முற்படுகிறார்கள் வீடு வீடாக சென்று திண்ம கழிவு அகற்றுவதற்கான பணத்தை செலுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றனர். இது ஆரோக்கியமான விடயமாக இல்லை என குறிப்பிட்டார்.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மாநகரசபையின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கழிவகற்றல் முகாமைத்துவம் என்பது ஏனைய சேவைகளைப் போல அல்ல ஒவ்வொரு நாளும் அகற்றப்படவேண்டும். மக்களின் நலனுக்காகவே மாநகரசபை தீர்மானங்களை நிறைவேற்றுகிறது. எனவே பொதுமக்களை பிழையாக வழிநடாத்தும் அரசியல்வாதிகளிடம் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்றும் இதன்போது தெரிவித்தார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அர்ஷாத் காரியப்பர் பிரதம கணக்காளர் ஏச்.எச். தஸ்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(ஏ.எல்.எம். சினாஸ், பாறுக் ஷிஹான்)

No comments:

Post a Comment