கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் அதிநவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, April 30, 2020

கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் அதிநவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

சாதாரண குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் அதிநவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். தொழிநுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா டெலிகாெம் நிறுவனத்துடன் கலந்துரையாடி வருகின்றோம் என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாடி சில்வா தெரிவித்தார். 

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொராேனா வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் நீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொராேனா வைரஸ் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பரவாமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஓர் அங்கமாக சிறைச்சாலைக்கு வரும் கைதிகளை விசேட அறையில் தங்கவைத்து அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என சோதனை நடத்திய பின்னர் சிறைக் கூடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். 

அத்துடன் சிறைச்சாலையில் சாதாரண குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களில் நாளாந்தம் 400க்கும் அதிகமானவர்கள் நீதிமன்றங்களுக்கு ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர். 

இவ்வாறு இவர்கள் ஆஜர்படுத்த நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லும்போது அவர்களில் யாருக்காவது வைரஸ் தொற்று ஏற்பட்டால் முழு சிறைச்சாலைக்கும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அதனால் இவ்வாறான கைதிகளை சிறைச்சாலையில் இருந்தே விசாரணைகளை மேற்கொள்ள அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

அதற்காக ஆரம்பத்தில் ஸ்கைப் தொழிநுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டபோதும், அதில் படங்கள் தெளிவில்லாமல் இருப்பதால் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் டெலி பிரசன்ட் என்ற நவீன தொழிநுட்பத்தை பயன்டுத்தி இதனை மேற்கொள்ள கலந்துரையாடி வருகின்றோம். 

ஆரம்பமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கும் மாளிகாகந்த நீதிமன்றம் மற்றும் கொழும்பு பிரதான நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குமிடையில் இந்த தொழிநுட்பத்தை ஏற்படுத்த இருக்கின்றோம். இதன்மூலம் நீதிவான் மற்றும் சட்டத்தரணிகள் கைதிகளை தெளிவாக இனம் காண்டு வழக்கு விசாரணைகளை தொடர்வதற்கு எதிர்பார்கின்றோம். 

இந்த நவீன தொழிநுட்ப முறை வெளிநாடுகளில் செயற்பட்டு வருகின்றது. மேலும் இந்த வேலைத்திட்டத்தை ஓர் இரண்டு மாதங்களுக்குள் பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். இதற்காக அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்டு அதற்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

No comments:

Post a Comment