குறுகிய அரசியல் இலாபத்திற்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினால் நாட்டு மக்களும், சுகாதார பிரிவினரும் பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் : இலவச மருத்துவ சேவைக்கான மக்கள் இயக்கம் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

குறுகிய அரசியல் இலாபத்திற்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினால் நாட்டு மக்களும், சுகாதார பிரிவினரும் பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் : இலவச மருத்துவ சேவைக்கான மக்கள் இயக்கம் எச்சரிக்கை

(செ.தேன்மொழி) 

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை தளர்த்துவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் நாடளாவிய ரீதியில் பெரும் நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்று தெரிவித்திருக்கும் இலவச மருத்துவ சேவைக்கான மக்கள் இயக்கம், குறுகிய அரசியல் இலாபத்திற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தினால் நாட்டு மக்களும், சுகாதார பிரிவினரும் பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது. 

இது தொடர்பில் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் நிலான் பெர்ண்னாடோ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொற்றை அனுப்பியுள்ளார். 

இந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல குறைப்பாடுகளுக்கு மத்தியிலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் சில சாதகமான பலன்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. 

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், நபர்களுக்கிடையிலான இடைவெளியை பேணுதல் மட்டுமன்றி தனிப்பட்ட நபரொருவரின் சுகாதார நலன் மாத்திரமின்றி அனைவரது சுகாதார நலன் தொடர்பிலும் தெளிவுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அந்த நடவடிக்கைகளை தளர்த்துவதற்காக தீர்மானித்தமை பல சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். கொரோனா தொற்று தொடர்பில் வெளியிடப்பட்டு வரும் தரவுகளுக்கமைய இந்த நிலைமை மேலும் உறுதியாகின்றது. 

வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகை, வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள ஏனைய நாடுகளின் நோயாளர்களின் தொகையில் குறைவாக காணப்பட்டாலும், ஒவ்வொரு நாளும் நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். இதனால் வைரஸ் தொற்று தொடர்பான எச்சரிக்கை நிலைமையில் எந்தவித மாற்றமும் இல்லை. அனைவரும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை தளர்த்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் வைரஸ் தொற்று தொடர்பான பிரதானிகள் மற்றும் தொழிநுட்ப குழுவினர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? இவர்களின் அனுமதியுடனான இந்த தீர்மானங்கள் செயற்படுத்தப்படுகின்றன? அல்லது போலி தரவுகளை ஊடகங்களுங்களுக்கு வெளியிட்டு, அதற்கமைவாக அரச துறையினரின் பொறிமுறையொன்று செயற்படுத்தப்படுகின்றதா? என்று பாரிய சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்த வைரஸ் தொற்று தொடர்பான தேவையற்ற அச்சம் மற்றும் அநாவசியமான ஆரோக்கிய நடவடிக்கைகளும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இதனால் வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்பும் இருக்கின்றது. இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் நாடு என்ற வகையில் பெரும் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்க வேண்டி ஏற்படுவதுடன், அதனால் பல பாதிப்புகளையும் எதிர்க்கொள்ள வேண்டி ஏற்படுவதுடன், இவ்வளவு காலமும் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கும் பலன் கிட்டாமல் போய்விடும். 

இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த செயற்பாடுகளை தளர்த்துவதன் ஊடாக எதிர்நோக்க வேண்டிய நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் புலப்படுவதுடன், குறுகிய அரசியல் இலாபத்திற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தினால் நாட்டு மக்களும், சுகாதார பிரிவினரும் பெரும் நெருக்கடியை எதிர்க்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். இதனால் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து செயற்பாடுகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். 

இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கமைய வைரஸ் பரவலை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் வைத்திய துறையினர் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். 

இதேவேளை வைரஸ் பரவல் தொற்றை கண்டறிவதற்காக முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பில் அவதானம் செலுத்துவதுடன், 5000 பேர் வரையில் இன்னும் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளனர். இவர்களுக்கான பரிசோதனைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். 

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக செயற்பட்டு வரும் வைத்திய பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் அரச நிர்வாகத் துறையினரின் பாதுகாப்பிற்கு அவசியமான பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அவர்களுக்கு அவசியமான உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். 

இதேவேளை வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்ட பிரதேசங்கள் தொடர்பில் சமூகத்தில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் செய்திகள் பரப்பட்டு வந்தமை கடந்த காலங்களில் அவதானிக்க கூடியதாக இருந்தது. இவ்வாறான நிலையில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தங்களது நோய் தொடர்பில் தெரியப்படுத்துவதற்கு தயக்கமடையக் கூடிய நிலைமையும் தோற்றம் பெற்றிருந்தது. இவ்வாறான செயற்பாடுகளினால் வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகினறதனால், இதுபோன்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். 

வைத்திய பிரிவினர்களால் வெளியிடப்படும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களும், அறிவுறுத்தல்களுமே வெளியிடப்பட வேண்டும். 

இதேவேளை வைரஸ் பரவலின் காரணமாக நீரிழிவு, இருதய நோய் போன்ற தொற்றா நோய்களால் பீடிக்கப்பட்டிருக்கும் நோயாளர்கள் தங்களுக்கான சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலைமைகள் தோற்றம் பெற்றுள்ளன. இவர்களுக்கான சிகிச்சையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சுகாதார பிரிவு அவதானம் செலுத்துவதுடன், அதற்காக நேரடி பொறிமுறையொன்றையும் செயற்படுத்த வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கமைவாக செயற்படுவது மிக அவசியமானதாகும்.

No comments:

Post a Comment