ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கடிதம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 7, 2020

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கடிதம்

முஸ்லிம் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து நாட்டில் நிலையான சமாதானத்தை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்ககுமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருக்கும் தொலைநகல் ஊடாக அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பை.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அதிமேதகு கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள்,
ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு - 01

ஐயா,

Covid19 வைரசினால் மரணமடைந்தவர்களின் உடல்களை இறுதிக் கிரியை செய்தமை தொடர்பாக

இன்று உலகை ஆட்கொண்டுள்ள covid19 வைரஸ் நமது நாட்டில் பரவுவதை தடுப்பதற்காக முக்கிய பல நடவடிக்கைகளை ஜனாதிபதியான தங்களின் தலைமையிலான குழு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான அமைச்சுகளையும், சுகாதாரத்துறையில் அதிகாரமளிக்கப்பட்டவர்களையும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தையும், இராணுவத்தினரையும், பொலிசாரையும், ஏனைய உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கிய ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவியமைக்காக எமது பாராட்டுகளை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

இம்முயற்சிக்காக எமது முஸ்லிம் சமூகம் அதன் முழு ஆதரவையும் வழங்கி உள்ளது. இந்நாட்டின் 30 வருட யுத்த காலத்திலும் கூட முஸ்லிம் பள்ளிவாசல்களும் நாளாந்தம் ஐவேளைத் தொழுகைக்காகவும் வெள்ளிக்கிழமை ஒன்றுகூடித் தொழும் ஜும்மா தொழுகைக்காகவும் திறந்திருந்தன. தற்பொழுது அரச ஒழுங்கு விதிகளுக்கு அமைவாகவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளதோடு, முஸ்லிம்கள் அவர்களின் வீடுகளிலிருந்து தொழுகையை நிறைவேற்றுகின்றமை முஸ்லிம்கள் சட்டத்தை மதித்து நடக்க கூடியவர்கள் என்பதை பறைசாற்றுகின்றது.

கொரோனா வைரஸினால் மரணமடைந்தவர்களின் இறுதி கிரிகைகளை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 24.03.2020 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட இடைக்கால வழிகாட்டுதல் அறிக்கை தெளிவான முறையில் அடக்கம் செய்வதற்கும், எரிப்பதற்கும் அனுமதி வழங்குகிறது.

பல வெளிநாடுகளும் இறந்த உடல்களை அவர்களது சமயமரபுகளுக்கு அமைவாக இறுதிக் கிரியைகளை நடத்துவதற்கு அனுமதித்துள்ளன. இதே போன்று ஒரு தீர்மானம் சுற்றறிக்கைகளுக்கு அமைவாக நமது நாட்டின் அதிகாரமளிக்கப்பட்டவர்களினால் எடுக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறு இருப்பினும், இலங்கை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அடக்கம் செய்வதற்கும், எரிப்பதற்கும் அனுமதியளிக்கும் வகையிலான சுற்றறிக்கை வலுவில் இருக்கத்தக்கதாக மார்ச் 30 ம் திகதி அன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்த முஹம்மட் ஜமால் அவர்களின் உடலை முஸ்லிம் சமய மரபுகளுக்கு அமைவாக அடக்கம் செய்ய கையளிக்க படுவதற்கு பதிலாக தகனம் செய்யப்பட்டமையால் முஸ்லிம்கள் மனத்தாக்கத்திற்கும், துயரத்திற்கும் உள்ளாகி இருக்கிறார்கள்.

இதேவேளை சென்ற 01.04.2020 ஆம் திகதி கொழும்பு மருதானை சேர்ந்த பி.எச்.எம்.யூனுஸ் என்பவர் கொரோனா நோயினால் மரணமடைந்தார். இவரின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் கௌரவ பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இவருடைய ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை திடீரென பி.எச்.எம்.யூனுஸ் என்பவரின் ஜனாஷாவும் எரிக்கப்பட்டு விட்டதாக திடீர் செய்தி கேட்டு இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகம் பேரதிர்ச்சியும் கவலை அடைந்துள்ளது.

இத்துயர நிகழ்வானது எங்களது சமய கடமையை மீறிய ஒரு செயல் ஆகும் என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள இவ்வேளையில் இத்துயர நிகழ்வு முஸ்லிம்களிடத்தே தங்களுடைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
எமது முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் மட்டுமல்லாது பெரும் வரலாற்று அபிவிருத்தி வேலைகளையும் நிகழ்த்தியவர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றி உறுதி என்ற நிலைமை இருந்தது. 2015 ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நானும் எனது ஆதரவாளர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்காக பெரும் பங்காற்றினோம். இருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சில இனவாத குழுக்களின் வன்முறை காரணமாக தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கிழக்கு மாகாண சபையில் நான் வகித்துவந்த கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு பதவியினை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அவர்களின் அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டேன். என்பதனையும் இச்சந்தர்பத்தில் நினைவு படுத்துகின்றேன்.

எனவே, மேற்படி விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு எடுத்து ஊழஎனை19 வைரசினால் உயிரிழக்கும் முஸ்லீம் நபர்களின் உடல்களை இஸ்லாமிய சமய முறைப்படி அடக்கம் செய்யும் பொருத்தப்பாடு தொடர்பில் ஆராய்வதற்கான ஆலோசனை சபையொன்றை பொது சுகாதாரம், சட்டமருத்துவம், சட்டம் மற்றும் மண்பகுப்பாய்வு போன்றவற்றிலான துறைசார் நிபுனர்களைக் கொண்டு அமைக்குமாறு தங்களை வேண்டிக்கொள்வதோடு இலங்கை முஸ்லிம் சமூகம் தங்களின் மார்க்க கடமைகளின் பிரகாரம் செயற்படுவதற்கு அனுமதியளிக்குமாறும் தங்களை வேண்டிக்கொள்கின்றேன்.

இதன் மூலம் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவதுடன், முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் எமது சமூகம் தொடர்பாக முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் ஊடாக நமது நாட்டில் நிலையான வரலாற்று இன உறவுகளுக்கு பங்களிக்கக் கூடிய நிலைமை உருவாகும். என்பதனையும் நமது நாட்டில் வாழும் பல்லின சமூகங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நமது நாட்டில் நிலையான சமாதானத்தை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

எம்.எஸ்.உதுமாலெப்பை,
முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர்,
கிழக்கு மாகாணம்.

பிரதி :-
1. கௌரவ பிரதம மந்திரி
திரு. மஹிந்த ராஜபக்ஷ, பிரதம மந்திரி காரியாலயம், அலரி மாளிகை, கொழும்பு

2. கௌரவ திருமதி. பவித்ரா வன்னிஆராச்சி
சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர், சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு, சுவசிரிபாய, இல 385, வண. பத்தேகமவிமலவன்ச தேரோ மாவத்தை, கொழும்பு 10,

3. கௌரவ திரு. பஸீல் ராஜபக்ஷ
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், தலைவர்- கொரோனா விஷேட குழு , கொழும்பு

4. கௌரவ ரவூப் ஹக்கீம்
முன்னாள் நகரதிட்டமிடல், நீர்வழங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர், தலைவர் - சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

5. அஷ்ஷேக் முப்தி எம்.ஐ.எம்.றிஸ்வி
தலைவர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment