ஹக்கீமை நோக்கி விரல் நீட்டுவது இயலாமையின் விளைவு, இனவாதத்தின் தொடக்கப்புள்ளி எங்குள்ளது..? - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 7, 2020

ஹக்கீமை நோக்கி விரல் நீட்டுவது இயலாமையின் விளைவு, இனவாதத்தின் தொடக்கப்புள்ளி எங்குள்ளது..?

ஒரு விடயம் நடந்துவிட்டால் அதற்கு உரிமை கோர ஆயிரம் பேர் வருவார்கள். அது தடைபட்டுவிட்டால் ஆயிரம் குற்றச்சாட்டுக்களை முன் வைப்பார்கள். இதுவே மனிதப் பண்பு. இதுவெல்லாம் "வேலைக்காரிக்கு பிள்ளைச் சாட்டு" என்ற முதுமொழிக்கு ஒப்பானது. எத் தடைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து பயணிப்பவனே உண்மையான வேலைக்காரன். இன்று முஸ்லிம் சமூகத்திடையே உண்மையான வேலைக்காரனுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமை மறுக்க முடியாத உண்மை.

இலங்கையில் கொரனா தொற்றால் இரண்டாவது நபராக முஸ்லிமொருவர் மரணித்திருந்தார். இவரின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய முஸ்லிம் சமூகமே விரும்பியது. அதற்கேற்ப அன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தில் அனுமதியும் இருந்தது. இருந்தும் அந்த ஜனாஸா தகனம் செய்யப்பட்டிருந்தமை கவலையான விடயம். சுற்று நிரூபமே அனுமதிக்கின்ற போது அடக்கம் செய்யாமல் தவிர்த்ததேன்? அன்று அரச அதிகாரிகள் தான் இலங்கையில் வழக்கிலிருந்த கொரோனா வழிகாட்டல் சுற்று நிரூபத்தை மீறி இருந்தார்கள்.

இதனை மு.காவின் தலைவர் கண்டித்து முக நூலில் பதிவிட்டிருந்தார். ஒரு முஸ்லிம் கட்சி தலைவர் என்ற வகையில் அதனை கண்டிப்பதும், அது தொடர்பில் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்துவதும் அவரது கடமை. ஒரு விடயத்தில் அமைதியாக இருந்தால் அச் செயலை ஏற்பதாக அல்லது அவ்விடயத்தில் குறித்த நபருக்கு உறுதியற்ற நிலைப்பாடு உள்ளதாகவே பொருள்கொள்ளச் செய்யும் . மௌனம் சம்மதத்தின் அறிகுறியென்றும் கூறுவார்கள் அல்லவா? இதனை அன்று அவர் செய்யாமல் விட்டிருந்தால், வரலாறே அவரை கண்டித்திருக்கும். அவரது அறிக்கை பெரும் பூகம்பத்தை உருவாக்கியிருந்தது. இனவாதிகள் இனவாத அம்புகளால் ஹக்கீமை தாக்கினர். இந் நிலையில் இரண்டாவது முஸ்லிம் நபரும் மரணமானார்.

முதல் மையித்தை விட்டு விட்டோம். இரண்டாவது நபரையாவாது அடக்கம் செய்ய வேண்டுமென பலரும் முயற்சித்தார்கள். இந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிவுற்றது. இத் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கு எம்மவர்களின் அரசியல் தோல்வியும் ஒரு காரணம் என்பதை என்னுள்ளம் அடிக்கடி சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கின்றது. இது பற்றிய நீண்ட கலந்துரையாடல் அவசியம். வெற்றியில் பங்காளியாக துடித்த அனைவரும் தோல்வியென்றதும் வழமையான பாணியில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கலானர்.

இக் குற்றச் சாட்டுக்கள் நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்ட முதுமொழி போன்று "வேலைக்காரிக்கு பிள்ளைச் சாட்டு" போன்றதே. சாதிப்பவன் எதனையும் காரணமாக குறிப்பிட மாட்டான். இதில் இனவாதம் உருவாகிய புள்ளி எங்கே என்று பார்ப்பது அவசியமானது. அடக்கலாம் எனும் சுற்றுநிரூபம் வெளியான போது யாரும் இனவாதம் பேசவில்லை. இதனை உலக சுகாதார ஸ்தாபனமே அனுமதித்திருந்தமை இனவாத கண்ணோட்டங்கள் ஆழ ஊடுருவுவதை தடை செய்திருந்தது. ஆரம்பத்தில் அடக்க முடியாது என்ற சுற்று நிரூபம் வந்த போதும் யாரும் இனவாதமாக்கவில்லை. முஸ்லிம் சமூகம் முறையாக அணுகியே அடக்கும் அனுமதியை பெற்றிருந்தது. அம் முறையான அனுமதி மீறப்பட்டதுமே மு.காவின் தலைவர் ஹக்கீம் கண்டித்திருந்தார். முறையான பெற்ற அனுமதி மீறப்படுகின்றதென்றால், அங்கு வேறு ஏதோ பிரச்சினையுள்ளமை தெளிவாகிறதல்லவா?

முதலாம் முஸ்லிம் நபர் சுற்று நிரூபம் அடக்க அனுமதித்துள்ள நிலையில் எரியூட்டப்பட்டதானது அடக்குவதில் சுகாதார பிரச்சினை உள்ளது போன்ற ஒரு சிந்தனையை இனவாதிகளிடத்தில் தோற்றுவித்திருந்தது. உடனே சுற்று நிரூபம் எரிக்கவே வேண்டும் என மாற்றப்பட்டமை இதனை உறுதியும் செய்திருந்தது. இதுவே இவ்விடயத்தில் இனவாதம் தோற்றுவிக்கப்பட்டிருந்த முதற்புள்ளி. இது யாருடைய பிழை என்பதை சமூகம் தீர்மானித்துக்கொள்ளட்டும். இதில் இனவாதம் மு.கா தலைவர் ஹக்கீமால் தோற்றுவிக்கப்படவில்லை என்பது உறுதியான உண்மை.

முதலாவது ஜனாஸா எரியூட்டப்பட்டதும் எந்த முக்கிய அரசியல் வாதியாவது, குறிப்பாக ஆளும் கட்சி அரசியல்வாதியாவது மக்கள் முன் வந்து, இது நடந்தேறிவிட்டது, இதனை நாங்கள் சரி செய்து தருகிறோம், இதனை பெரிதாக்காது விடுங்கள் என்று கூறினார்களா. இல்லையல்லவா? இவ்விடயமானது இதனை ஆளும்கட்சியினராலோ, வேறு யாராலோ தீர்க்க முடியாது என்பதை துல்லியமாக்கியது. இவ்வாறான சூழ் நிலையில் ஹக்கீம் போன்ற முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர், தனது கண்டன அறிக்கையை பதிவாக்குவதில் தவறேதுமில்லை. இவ்வாறான சூழ் நிலையில் கண்டனமே அரசுக்கு அழுத்தம் வழங்க சிறந்த வழி என்றாலும் தவறாகாது. இவற்றின் மூலம் உயரிய அழுத்தம் அரசுக்கு வழங்கப்பட்டிருந்தது. வேலை தான் நடைபெறவில்லை.

மு.காவின் தலைவர் ஹக்கீம் மீதான இனவாதிகளினதும், வேறு சிலரது அரசியல் குற்றச்சாட்டானது இயலாமையின் விளைவே! வேலைக்காரன் சாட்டு போக்கு கூற மாட்டான். இது அரசை விமர்சித்து மக்களை அரசின் மீது வெறுப்படைய வைக்கும் நேரமல்ல. இவ் விடயத்தில் இலங்கை அரசின் மீது முஸ்லிம்கள் அதிருப்தி நிலையில் இருந்தாலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவது எமது தலையாய கடமை. எமது பொறுப்பற்ற சில செயற்பாடுகளும், இவ்வாறான மிகவும் பொறுப்புவாய்ந்த விடயங்களை கையாள அனுமதிக்காமையாக இருக்கலாம். இந்த கோணத்திலும் நாம் சிந்திக்க தவறக் கூடாது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

No comments:

Post a Comment