(எம்.மனோசித்ரா)
கொவிட்-19 வைரஸ் தொற்று வேகமாக பரவும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணம் குறித்து மதிப்பீடுகளை மேற்கொண்டு பரிந்துரைகளை முன்வைக்கவும், மலையக மக்களை இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க மேல் மாகாணத்தையும், தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக மலையக மக்களின் சுகாதார பாதுகாப்பையும் மதிப்பீடு செய்து பரிந்துரைகளை முன் வைக்கவுள்ளனர்.
சர்வ கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிலையில் இதில் கலந்துகொள்வதற்கு முன்பதாகவே இந்த விடயம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சி கொவிட்-19 தொற்று குறித்து மதிப்பீடுகளை மேற்கொண்டு பரிந்துரைகளை முன்வைக்க தீர்மானித்துள்ளது.
அதேபோன்று மலையக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதார பாதுகாப்பு விடயங்கள் குறித்து மதிப்பீடுகளை மேற்கொண்டு தேவையான பரிந்துரைகளை முன்வைக்க உள்ளது.
இவ்வாறு முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் கையளித்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒத்துழைப்புகள் வழங்கப்பட உள்ளது.
குறித்த இரு பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான இரு அறிக்கைளை எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கையளிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment