(நா. தனுஜா)
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் நபர்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளின் எண்ணிக்கையை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் இன்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் நபர்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று கூட்டத்தில் நான் வலியுறுத்தினேன். ஏனெனில் எமது நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 150 - 200 வரையான சோதனைகளே இடம்பெறுகின்றன.
எமது நாட்டைப் போன்ற சனத் தொகையைக் கொண்ட நாடுகளில் இடம்பெறும் பரிசோதனைகளில் அளவு உயர்வாக உள்ளது. எனவே நாமும் அதனை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
அடுத்ததாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்வரிசையிலுள்ள சுகாதார சேவையாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்ட தரப்பினருக்கு அவசியமான பாதுகாப்பு உபகரணங்களுக்கான தட்டுப்பாடொன்று நிலவுவது பற்றயும், அதற்குரிய தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினேன்.
மேலும் பொதுமக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவதில் ஜனாதிபதியின் உத்தரவிற்கும் நடைமுறையில் அதனை செயற்படுத்துவதற்கும் இடையில் காணப்படும் வேறுபாடுகள் குறித்து ஆராய்ந்ததுடன், அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் பரிந்துரைகளை முன்வைத்தேன்.
மேலும் நாட்டில் உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடொன்று ஏற்படும் வாய்ப்புள்ள நிலையில் இது குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பினேன் என்றும் அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment