(நா.தனுஜா)
தற்போதைய நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை மழுங்கடித்து, ஏகாதிபத்தியவாதத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது. இத்தருணத்தில் அரசியல்சார் நலன்களை அடைய முயற்சிப்பது வரவேற்கத்தக்கதல்ல மாறாக மக்களின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டுமக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் இன்று செவ்வாய்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தற்போது நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சி கண்டிருப்பதுடன், மக்களின் அன்றாட வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்திருக்கிறது.
விவசாயிகள் தமது பயிர்ச் செய்கை நடவடிக்கைகளைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இனிவரும் காலத்தில் பாரியதொரு உணவுப் பொருள் தட்டுப்பாடொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.
மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதற்கான ஜீவனோபாய மார்க்கங்கள் அனைத்தும் முடங்கிப்போயிருக்கின்றன.
எனவே இத்தகையதொரு நெருக்கடியில் அரசாங்கம் நாட்டு மக்கள் தொடர்பில் சிந்தித்து, அவர்கள் வாழ்வதற்கான வழிவகையொன்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
ஒரு மனிதன் வாழ்வதற்கான அன்றாட வாழ்க்கைச் செலவு பெருமளவில் அதிகரித்திருக்கையில், சிறியதொரு தொகைப்பணத்தை வழங்கி அவர்களது தேவைகளை ஈடுசெய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனினும் தற்போதைய நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை மழுங்கடித்து, ஏகாதிபத்தியவாதத்தை நிலைநாட்டுவதற்காக முயற்சிகள் இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது.
இத்தருணத்தில் அரசியல்சார் நலன்களை அடைய முயற்சிப்பது வரவேற்கத்தக்கதல்ல மாறாக மக்களின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment