பாராளுமன்றத்தை கூட்டுவதா? இல்லையா? அரசாங்கத்திற்குள் இரட்டை நிலைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

பாராளுமன்றத்தை கூட்டுவதா? இல்லையா? அரசாங்கத்திற்குள் இரட்டை நிலைப்பாடு

(ஆர்.யசி) 

நாட்டின் தற்போதுள்ள நெருக்கடிகால நிலைமைகளை கையாள பாராளுமன்றத்தை கூட்டுவதா அல்லது தொடர்ந்தும் நிறைவேற்று அதிகாரத்தின் தீர்மானங்களுக்கு அமைய செயற்படுவதா என்பதில் அரசாங்கத்தில் இரட்டை நிலைப்பட்டு ஏற்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மற்றும் ஒரு சாரார் பாராளுமன்றம் அவசியமில்லை என கூறுகின்ற நிலையில் பிரதமர் மற்றும் மற்றொரு சாரார் ஜனநாயக ரீதியில் பயணிக்கும் எண்ணத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக நாடே நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் அடுத்த கட்டமாக எவ்வாறான தீர்மாங்களை முன்னெடுப்பது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். 

இதில் பாராளுமன்றத்தை கூட்டி புதிய சட்டங்களை உருவாக்கி நாட்டின் நெருக்கடி நிலைமைகளை கையாள வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் அதனை எவ்வாறு கையாள்வது என்பதை அரசாங்கத்தில் இரட்டை நிலைப்பாடுடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அமைச்சரவையில் ஒரு சிலர் பாராளுமன்றம் கூட்டப்படுவது ஆரோக்கியமான விடயம் என தெரிவித்துள்ளனர். எனினும் மற்றொரு சாரார் அதற்கு இணக்கம் தெரிவிக்காத வகையில் கருத்துக்களை முன்வைக்கின்றனர். 

எவ்வாறு இருப்பினும் இந்த விடயத்தில் அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தனவிடம் வினவியபோது அவர் கூறியதானது,

இப்போதுள்ள நிலையில் பாராளுமன்றத்தை கூட்டுவதில் சிரமங்கள் உள்ளது. எனினும் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனநாயக ரீதியில் சில தீர்மானங்களை எடுத்தாக வேண்டியுள்ளது. காபந்து அரசாங்கம் என்ற வகையில் மூன்று மாத கால எல்லைக்குள் தீர்மானங்களை முன்னெடுத்து அதே மூன்று மாத காலத்தினுள் தேர்தல் ஒன்றினை நடத்த வேண்டும் என்பது கட்டாயமாகும். அதற்கமைய ஜூன் மாதம் 2 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடியாக வேண்டும். 

எனினும் இப்போதுள்ள நாட்டின் சூழ்நிலை தேர்தல் ஒன்றினை நடத்தக் கூடியதாக அமையவில்லை. ஆகவேதான் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி அவர்களை சட்டமா அதிபருடன் கலந்துடையாடி தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்க வலியுறுத்தியுள்ளார். 

அதற்கமைய எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் சட்டமா அதிபர் ஜனாதிபதி இருவரும் கலந்துரையாடி மாத இறுதிக்குள் தீர்மானம் ஒன்றினை அறிவிப்பார்கள். 

அதேபோல் தேர்தலை நடத்துவது குறித்து இதுவரையில் அரசாங்கம் எந்த நிலைப்பாட்டையும் முன்னெடுக்கவில்லை. பகுதி பகுதியாக தேர்தலை நடத்துவது என்பதெல்லாம் சாத்தியமற்ற விடயமாகும். முதலில் நாட்டின் பாதுகாப்பையும், மக்களின் சுகாதார பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். 

ஜனாதிபதி தற்போதும் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பல ஆரோகியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். அதேபோல் அரசாங்கத்தில் ஒரு தரப்பினர் பாராளுமன்றத்தை கூட்டி உடனடி சட்டங்களை உருவாக்குவதில் இணக்கம் தெரிவித்தும் உள்ளனர். 

பிரதமர் இது குறித்து அமைச்சரவையில் கலந்துடையாடியிருந்தார். எவ்வாறு இருப்பினும் அரசாங்கம் மிகச் சரியாக தீர்மானம் எடுக்கும். இதில் மக்கள் எந்த வித குழப்பங்களையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 

நாட்டின் பொருளாதார, தேசிய உற்பத்தி மற்றும் மக்களின் வாழ்வாதார, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வேலைத்திட்டங்களை ஒன்று பாராளுமன்றத்தின் ஊடாகவேனும் அல்லது ஜனாதிபதி, பிரதமர் அமைச்சரவை ஊடாகவேனும் முன்னெடுத்து வெகுவிரைவில் நாட்டினை மீட்டெடுப்பதே அரசாங்கதின் நோக்கமாக உள்ளது என்றார்.

No comments:

Post a Comment