"மே மாதம் 10ஆம் திகதிக்கு முன் சுகாதாரத் துறையினர் கொவிட்-19 தொற்று பரவல் நூறுவீதம் கட்டுப்பட்டதாக அறிவித்தால் மட்டுமே ஜூன் 20 இல் பொதுத் தேர்தல்" - News View

About Us

About Us

Breaking

Thursday, April 30, 2020

"மே மாதம் 10ஆம் திகதிக்கு முன் சுகாதாரத் துறையினர் கொவிட்-19 தொற்று பரவல் நூறுவீதம் கட்டுப்பட்டதாக அறிவித்தால் மட்டுமே ஜூன் 20 இல் பொதுத் தேர்தல்"

மே மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் சுகாதாரத் துறையினர் கொவிட்-19 தொற்று பரவல் நூறுவீதம் கட்டுப்பட்டதாக அறிவித்தால் மட்டுமே ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இன்றைய சூழ்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் குறித்து ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையப் பெற்றுள்ளது என்று கேட்டபோது தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் தேர்தல் செயலகம் முக்கியமான பணிகளை இறுதி நேரத்தில்தான் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆரம்ப கட்டமாக படிப்படியாக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் பகுதிகளில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று பத்தரமுல்லையில் உள்ள covid-19 ஆய்வு நிலையத்தில் நடைபெற்ற சந்திப்பில் சுகாதாரத் துறை பாதுகாப்புத் துறை சார்ந்த உயர் மட்டத்தினர் கலந்து கொண்டனர். இதில் தேர்தல்கள் திணைக்கள உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா-19 தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசும் சுகாதாரத் துறையும் பெரும் பிரயத்தனங்கள் மேற்கொண்டிருப்பதாக இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது விடயத்தில் எடுத்தோம் போட்டோம் என்ற ரீதியில் செயற்பட முடியாது. இந்த முயற்சிக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு போதாமல் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை பாதுகாப்புத் துறையினரை அறிவுறுத்தல்களை நாம் அடிக்கடி பெற்று வருகின்றோம். தினசரி ஆணைக்குழுவின் உயர் மட்டம் கூடி நிலைமைகளை அவதானித்து வருகின்றது. இந்த நிலையில் நாளை மறுதினம் இரண்டாம் திகதி அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாட உள்ளோம். இச்சந்திப்பு தேர்தல் திகதியை உறுதிப்படுத்துவதற்காக அல்ல. நிலைமைகளை ஆராயும் பொருட்டு ஆகும்.

அதனை அடுத்து எதிர்வரும் 04ஆம் திகதி சனிக்கிழமை கட்சிகளுடனும் சுயேச்சைக் குழுக்களுடனும் கலந்துரையாட உள்ளோம். வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் ஒதுக்க இருக்கின்றோம். அதன் பின்னர் அந்த முழு விபரங்களும் உடனடியாக வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன் பின்னர் மே மாதம் 10ஆம் திகதி கூடி நிலைமைகளை ஆராய்வோம். அன்றைய தினத்தில் சுகாதாரத் துறையும் பாதுகாப்புத் துறையும் கொரோனா தொற்று 100 வீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளதை உத்திரவாதப்படுத்தினால் மட்டுமே ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானம் எடுக்க முடியும்.

இன்றைய நிலையை நோக்குகின்றபோது நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில் தேர்தலை எப்போது நடத்த முடியும் என்பதை எம்மால் உறுதியாக தெரிவிக்க முடியாது.

ஆனால் காலம் கடத்தாமல் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் நாமும் உடன்படுகின்றேன். மக்களின் ஜனநாயக உரிமையை சுருட்டி வைக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது. மே மாதம் 10ஆம் திகதி சந்திப்பை அடுத்து எமது அடுத்த நகர்வு குறித்து அறிவிக்க முடியும். எனவும் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

(எம்.ஏ.எம். நிலாம்)

No comments:

Post a Comment