ஊருக்கு MP : பாடங்களில் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், மீண்டும் மீண்டும் பாடம் படிப்பவர்களாக நாங்கள் இருக்கக்கூடாது - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 11, 2020

ஊருக்கு MP : பாடங்களில் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், மீண்டும் மீண்டும் பாடம் படிப்பவர்களாக நாங்கள் இருக்கக்கூடாது

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. தேர்தலும் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறுவதாக திகதியிடப்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறாக எமது ஊரிலும் ஊரிலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டும் என அதிபர்மார்களும், இன்னும் சிலரும் சேர்ந்த ஒரு குழு தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. இச்சந்திப்புக்களின் எண்ணிக்கை 60 ஐயும் தாண்டியுள்ளது.

அதேநேரம் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் அப்துர் ரஹ்மானும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கும் ஒன்றிணைய வேண்டும் என்ற குரலும் இந்த இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் மத்தியிலும், பிரமுகர்களின் மத்தியிலும் ஒலிக்கின்றது.

இதிலே நாங்கள் கடந்த நகர சபைத் தேர்தலை சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும். கடந்த நகர சபைத் தேர்தலிலும் இவர்கள் இருவரையும் ஒற்றுமையாக்குகின்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது கைகூடவில்லை. நடந்தது என்ன?

இவர்கள் இருவரும் தங்களை ஒரு மிகைப் படுத்திய நிலையில் கற்பனை செய்து கொண்டு இருந்தார்கள். நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியினர் தங்களது வாக்குகளை 10 ஆயிரத்திலிருந்துதான் எண்ண வேண்டும் என்றார்கள். முஸ்லிம் காங்கிரசையோ அல்லது முஸ்லிம் காங்கிரஸ் என்ற அடையாளத்தோடு வருபவர்களையோ தங்களோடு இணைத்துக் கொள்ள முடியாது என்றார்கள். சிப்லிக்கோ தனது சொந்த வாக்குகள் இந்த ஊரில் எத்தனை என்று அறிவதில் ஒரு ஆவல் இருந்தது.

சிப்லி பல தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும் அத்தேர்தல்களில் தனது சொந்த வாக்குகள் எத்தனை என்பதை அறியக் கூடிய சந்தர்ப்பம் இருக்கவில்லை. எனவே இத்தேர்தலிலாவது தனது சொந்த வாக்கை அறியும் ஆவல் அவருக்கு இருந்தது. அதாவது காத்தான்குடி நகர சபையை பிடிக்கும் அளவுக்கு தனது சொந்த வாக்கு வங்கி இருந்து விடுமோ என்றொரு நப்பாசையும் சிப்லி தரப்பினருக்கு இருந்தது.

அது மாத்திரமல்லாது நகர சபை தேர்தலின் பின்னர் இரு தரப்பும் இணைந்து நகர சபையில் ஆட்சி அமைக்கலாம் என்ற நப்பாசையும் இரு தரப்பினருக்கும் இருந்தது. தேர்தலுக்கு முன்னால் இவர்கள் இணைந்து கேட்டிருந்தால்தான் பல ஆசனங்களை தாங்கள் பெற்றிருக்கலாம் என தேர்தலின் பின் முடிவுகளைப் பார்த்த பின்னர் இரு தரப்பினரும் புரிந்து கொண்டார்கள்.

நகரசபைத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது சிப்லியும் ரஹ்மானும் எடுத்த வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் 6 வட்டாரங்களில் வென்றிருக்கலாம். எனவே தேர்தலுக்கு முன்னர்தான் இவர்கள் சேர்ந்து இருக்க வேண்டும். தேர்தலின் பின்னர் ஒன்று சேர்வோம் என்றது ஒரு அறிவுபூர்வமான முடிவல்ல.

கடந்த நகர சபைத் தேர்தலிலே எங்கே ரகுமானும் சிப்லியும் இணைந்து விடுவார்களோ என்று அந்நேரத்தில் ஹிஸ்புல்லா பயந்து போயிருந்தார். ரஹ்மானும் சிப்லியும் இணைந்து கேட்டால் நகர சபையை கைப்பற்றி விடுவார்கள் என ஹிஸ்புல்லாஹ் தெளிவாக அறிந்திருந்தார். ஹிஸ்புல்லாவுக்கு விளங்கியது கூட இந்த இரு என்ஜினியர்மாருக்கும் விளங்கவில்லை என்பதுதான் மனவருத்தமான செய்தி. சிப்லி நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடுவோம் என முன்வந்ததை கூட ரஹ்மானினால் சரியாக பயன்படுத்த தெரியாமல் இருந்தது என்பது மற்றொரு மனவருத்தமான செய்தி.

இவ்வாறான வறட்டு கௌரவங்களினால் சென்றமுறை நகர சபையைக் கைப்பற்றும் சந்தர்ப்பத்தை இவர்கள் இருவரும் இழந்தனர். இதனால் இவர்கள் இருவரினதும் ஆதரவாளர்கள் பட்ட மனவருத்தம் இன்னதென்று சொல்ல முடியாது. தேர்தல் மறுநாள் இந்த ஆதரவாளர்கள் என்னிடம் வீதியிலும், மார்க்கெட்டிலும், ஹோட்டலிலும் கண்டு இருவரும் சேர்ந்து கேட்டிருக்க வேண்டும் என அழாக்குறையாக சொன்னார்கள். இந்த 12,000 ஆதரவாளர்களின் விருப்பமும் இவர்களுக்கு புரியுமா? இந்த 12,000 வாக்காளர்களின் தீர்மானத்தை இவர்கள் இருவரும் மடத்தனமாக எடுத்துவிட்டார்களே.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்ற காலத்திலிருந்து ஒவ்வொரு முறையும் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இன்றுவரை பெற்று வருகின்றது. ஆனால் ஹிஸ்புல்லா அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறவில்லை. இடையிடையே பல தடவைகள் தோற்று இருக்கின்றார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்திலே எப்போதுமே தோற்கவில்லை. எனவே முஸ்லிம் காங்கிரசுக்கு பிரதிநிதித்துவம் எப்போதும் கிடைத்து வருகிறது.

எனவே முஸ்லிம் காங்கிரசின் ஊடாக எமது ஊருக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதே எமக்குள்ள இலகுவான வழி. வழக்கமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே இரண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெற்று வருகின்றது. ஒரு பிரதிநிதித்துவம் முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக கிடைக்கின்றது. மற்ற பிரதிநிதித்துவம் ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு கட்சியின் ஊடாக கிடைக்கின்றது. முஸ்லிம் காங்கிரசின் ஊடாக கிடைக்கின்ற பிரதிநிதித்துவமானது நூறு வீதம் முஸ்லிம்களின் வாக்குகளினால் கிடைக்கின்றது. ஆனால் மற்ற கட்சிகளின் ஊடாக கிடைக்கின்ற பிரதிநிதித்துவமானது முஸ்லிம் வாக்குகளோடு சேர்ந்து தமிழர்களின் வாக்குகளையும் சேர்த்துத்தான் எமக்கு அந்த பிரதிநிதித்துவம் கிடைக்கின்றது. எனவே தமிழர்கள் இம்முறை முஸ்லிம் பிரதிநிதி பாராளுமன்றம் செல்ல எந்த அளவு உதவுவார்கள் என்று கூற முடியாது.

எனவே முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கின்ற அந்த பிரதிநிதித்துவத்தை எமது ஊருக்கு எவ்வாறு எடுப்பது என்று பார்த்தால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக முஸ்லிம் காங்கிரசிற்குரிய ஏறாவூர் வாக்குகள் இரண்டாகப் பிரிவதற்கு உரிய சந்தர்ப்பம் அதிகமாக் காணப்படுகின்றது. எனவே இவ்வாறு ஏறாவூர் வாக்குகள் பிரிகின்ற போது காத்தான்குடி வேட்பாளர் வெற்றி பெறுவார். காத்தான்குடி வேட்பாளர் சுமார் 17,000 வாக்குகளைப் பெறுகின்ற போது காத்தான்குடி வேட்பாளர் வெற்றி பெறுவார்.

சென்ற முறை பாராளுமன்றத் தேர்தலிலே முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூட்டு 12,000 வாக்குகளை எமது ஊரிலே பெற்றது. இதனை விட எமது ஊர் இன்னும் 5,000 வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருக்கு அளிக்கின்ற சந்தர்ப்பத்திலே எமது ஊருக்கு MP என்ற இலக்கை எமது ஊர் இலகுவாக அடைந்து கொள்ளும்.

எனவே இந்த இலக்கை அடைவதற்கு ரஹ்மானும் சிப்லியும் ஒன்றிணைய வேண்டும். இருவருக்கும் தங்களுக்கென்று தனிப்பட்ட இலக்குகள் இருக்கலாம். முதலில் எமது ஊரிலே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். கடந்த 32 வருடங்களாக ஓரிடத்தில்தான் ஆட்சி இருந்து வருகின்றது. எனவே எமது ஊர் இளைஞர்களும் அரசியல் என்றால் தனி நபர் சொத்துக்குவிப்புதான் என்று தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள். 32 வருடம் என்பது ஒரு தலைமுறைக்கான காலமாகும். எனவே எமது ஒரு தலைமுறையே அரசியலைத் தவறாக புரிந்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் ரஹ்மானும் சிப்லியும் ஒன்றிணைய வேண்டும்.

தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியால் ஆளப்பட்டு வந்தது. அதனை கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் ஒன்றாக சேர்ந்துதான் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தார்கள். ஆட்சியை மாற்றி விட்டு பின்னர் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் இரண்டாகப் பிரிந்து மாறிமாறி தமிழகத்தை ஆட்சி செய்தார்கள்.

எனவே ரஹ்மானும் சிப்லியும் சேர்ந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பின்னர் இருவரும் பிரிந்து செயற்படலாம். மாற்றத்தைக் கொண்டுவர ஒருவர் இதிலே கட்டாயம் விட்டுக்கொடுப்பைச் செய்ய வேண்டும். இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஆசைப்பட்டால் இருவருக்குமே கிடைக்காது. ஏனெனில் இதற்கு சென்ற நகரசபைத் தேர்தல் எமக்கு நல்லதொரு பாடம். பாடங்களில் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் பாடம் படிப்பவர்களாக நாங்கள் இருக்கக்கூடாது. காத்திருந்துதான் அரசியல் செய்ய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி டி.பி.விஜயதுங்க போன்ற லட்சத்தில் ஒருவருக்குத்தான் அதிர்ஷ்டத்தின் மூலம் பதவி கிடைக்கும். மற்றபடி காத்திருந்துதான் அரசியலைச் செய்ய வேண்டும்.

ரஹ்மானும் சிபியும் "ஏமாற்றுவதை விட தோல்வியடைவதே மேல்" என்ற நல்ல கொள்கை உடையவர்கள்.

சிலர் முஸ்லிம்களுக்கு தனித்துவ அரசியல் தேவை இல்லை என்று கூறுகின்றார்கள். முஸ்லிம்களுக்கு உரிய தனித்துவ அரசியல் இன்னும் கூர்மையாக தேவைப்படுகின்ற இந்தக் காலகட்டத்திலே முஸ்லிம்களுக்கு தனித்துவ அரசியல் தேவையில்லை என்பது தேவையில்லாதது. முஸ்லிம்கள் அந்தக் கட்சியில் கொஞ்சமும் இந்தக் கட்சியில் கொஞ்சமுமாக பிரிந்து கரைந்து போக வேண்டும் என்கிறார்கள். ஆனால் இஸ்லாம் கூறுவதோ முஸ்லிம்கள் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளவேண்டும். முஸ்லிம்கள் அங்குமிங்கும் பொக்கெட் பொக்கெடாக பிரிந்து செயல்பட வேண்டும் என்று இஸ்லாம் எங்களுக்கு ஒருபோதும் கூறவில்லை.

சிலர் முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை அழிந்துவிடும் என்று கனவு காண்கிறார்கள். இது முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்ற காலத்திலிருந்து கூறிவரும் கூற்று ஒன்றுதான். தமிழர்களுக்குத் தனித்துவக் கட்சியான தமிழர் கூட்டமைப்பு இருப்பது போல முஸ்லிம்களுக்கும் தனித்துவக் கட்சி தேவை என்பதை உணராத அளவுக்கு முஸ்லிம்கள் ஒன்றும் சிந்தனை குறைந்தவர்களில்லை. அண்மைக்காலமாக முஸ்லிம் காங்கிரசும், மக்கள் காங்கிரசும் ஒற்றுமையாகச் செயற்பட்டு வருவதைக் காண்கின்றோம். இது ஒரு ஆரோக்கியமான நிலையாகும். எனவே ஊருக்கு MP என்ற சாத்தியம் முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றினூடாகவே சாத்தியப்படும். இதன் கீழ் நாம் அணிதிரண்டு ஊருக்கான MP ஐப் பெறுவோம்.

ப்ரியத்துடன்,
மர்சூக் அகமட் லெவ்வை
காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர்.
காத்தான்குடி நகர சபையின் இன்னாள் உறுப்பினர்.

No comments:

Post a Comment