இரண்டாவது தடவையாகவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள் கே. வீரசிங்க, சட்டத்தரணிகளின் ஊடாக மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, மன்றில் ஆஜராகத் தவறியமைக்காக இரண்டாவது தடவையாகவும் அவருக்கு நேற்று (10) பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் 5 யானைகளை வைத்திருந்த சம்பவம் தொடர்பில், அலி ரொஷான் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக, மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்த விசாரணை அறிக்கையை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கொண்டுசென்ற சம்பவம் தொடர்பில் இரு தடவைகள் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆவணங்களை நாளைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆணைக்குழுவின் செயலாளர் உறுதியளித்துள்ளதை தொடர்ந்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெற, விகும் களுஆராச்சி, தம்மிக்க கனேபொல மற்றும் ஆதித்ய பட்டபெதிகே ஆகிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது.
இந்த உத்தரவை உடனடியாக பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்புமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டதுடன், வழக்கின் மேலதிக விசாரணை நாளை இடம்பெறவுள்ளது.
இதனிடையே, மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிக்க சட்ட ரீதியான அதிகாரம், விசாரணை ஆணைக்குழுவிற்கு இல்லையென, அரசியல் பழிவாங்கல் தொடல்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு, சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
ஆணைக்குழுவில் இன்று ஆஜராகுமாறு சட்ட மா அதிபருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment