கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரிகைகள் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பகம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 29, 2020

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரிகைகள் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பகம் அறிவிப்பு

(ஆர்.யசி) 

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக உயிரிழக்கும் நபர்களை சர்வதேச தனிமைப்படுத்தல் முறைகளுக்கு அமையவே நல்லடக்கம் செய்யப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பகம் தெரிவிக்கின்றது. வெளிநாடுகளில் உயிரிழந்துள்ள இலங்கை பிரஜைகளின் உடல்களை நாட்டுக்கு கொண்டுவர அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இலங்கையில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறான நிலைமைகளில் சுகாதார நடவடிக்கைகள் எவ்வாறு கருத்தில் கொள்ளப்படும் என கூறும்போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், கொரோனா தொற்று நோய் மூலமான மரணத்தின் போது பொதுவாக வயதெல்லை மற்றும் ஏனைய நோய்த் தாக்கங்கள் என்பன தாக்கம் செலுத்தும். உடல் பலவீனம், நுரையீரல் சம்பந்தமான நோய்கள், இருதய நோய்கள், புற்று நோய் உள்ளிட்ட மோசமான நோய்கள் இருப்பின் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மோசமானதாக அமையும். 

இந்நிலையில் உயிரிழக்கும் நபர்களை சர்வதேச தனிமைப்படுத்தல் முறைகளுக்கு அமையவே நல்லடக்கம் செய்யப்படும். எக்காரணம் கொண்டும் உறவினர் வீடுகளுக்கு உடலை வழங்க முடியாது. காரணம் என்னவெனில் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் தொற்றுக்களை பரவச் செய்யும் எந்த நடவடிக்கையையும் கையாள முடியாது. 

அதேபோல் உயிரிழந்த நபரின் உடல் உறவினர்களுக்கு கொடுக்கப்பட மாட்டாது. நெருங்கிய உறவினர் இருவருக்கு இறந்தவரின் முகத்தை மாத்திரம் பார்க்க ஒரு தடவை அனுமதி வழங்கப்படும். அதன் பின்னர் உடலை வீடுகளுக்கோ அல்லது வேறு சம்பிரதாய இடங்களுக்கோ கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட மாட்டது. 

'body bag' என அடையாளப்படுத்தப்படும் உடலை வைக்கும் பையில் வைத்து வைத்தியசாலையில் இருந்து உடலை தகனம் செய்யும் பகுதிக்கு கொண்டுசெல்லப்படும். இதன்போது உடலை எரிக்க அல்லது எட்டு அடிக்கு கீழ் புதைக்க அனுமதிக்க முடியும். எனினும் இவை அனைத்துமே சிறப்பு வைத்திய நிபுணர் குழுவின் கண்காணிப்பில் இடம்பெறும். 

மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இலங்கை பிரஜைகள் உயிரிழந்துள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அவர்களின் உடலை இலங்கைக்கு கொண்டுவர அனுமதி வழங்கப்படாது. தொற்று நோய் பரவல் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment