ஒரு சிறிய நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ஆராச்சியாளர்களிடம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

ஒரு சிறிய நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ஆராச்சியாளர்களிடம் தெரிவிப்பு

“இலங்கை ஒரு சிறிய நாடு, சிறிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. அதன் சனத்தொகையும் பெரியளவில் இல்லை. இத்தகையதொரு நாட்டை எப்படி அபிவிருத்தி செய்வது என்பது பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுங்கள்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆராய்ச்சித்துறையை சேர்ந்தவர்களிடம் தெரிவித்தார்.

இன்று உலகில் இருப்பது அறிவை அடிப்படையாகக்கொண்ட பொருளாதாரம் என்பதால் இலகுவில் பயிற்றுவிக்கக்கூடிய தொழிற்படையொன்று உள்ள எமது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டியது அவர்களை அடிப்படையாகக்கொண்டே ஆகுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆராய்ச்சித் துறையை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனம் தொடர்பாக அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவூட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்படும் சந்திப்பு தொடரில் நான்காவது சந்திப்பாக இச்சந்திப்பு இடம்பெற்றது. 
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய விஞ்ஞான மன்றம், ஆதர் சி கிளார்க் தொழிநுட்ப விஞ்ஞான மையம் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

“எமது அரசியல் கலாசாரத்தில் உள்ள வீழ்ச்சி நிலையை சரி செய்யும் நோக்குடனேயே மக்கள் அரசியலுக்கு வெளியில் உள்ள ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்துள்ளனர். இதுதான் நான் வெற்றிகொள்ள வேண்டியுள்ள சவாலாகும். மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் அரச துறைக்கு பாரியதொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்கள் வினைத்திறனாக செயற்பட்டால், மக்களுக்குத் தேவையான சேவைகளை உரிய முறையில் நிறைவேற்றினால் எமக்கு பிரச்சினைகள் இருக்காது” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொருளாதார, சமூக செயற்பாடுகளின் அனைத்து துறைகளினதும் முன்னேற்றத்திற்காக முறையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது பொருளாதார அபிவிருத்திக்கு முக்கிய காரணியாகுமென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், சமூகத்தின் கீழ் மட்டத்திற்கு உயர் வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தனது முக்கிய எதிர்பார்ப்பாகுமென்றும் குறிப்பிட்டார். வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இந்த நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எமது நாடு ஒரு விவசாய நாடு எனினும் எமது விவசாயிகள் வறியவர்களாக உள்ளனர். இரண்டாவது, மூன்றாவது பரம்பறை விவசாயத்தை தெரிவு செய்வது. வேறு ஏதும் செய்ய முடியாதிருக்கும் சூழ்நிலையில் மட்டுமேயாகும். புதிய தலைமுறையை விவசாய துறைக்கு ஈர்ப்பதற்கு இத்துறைக்கு தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தியா அவ்வாறு செய்து பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளது. விவசாயத்துறைக்கு புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தி குறைந்த வருமானம் பெறும் மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் முறைமைகளை அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆராய்ச்சி நிறுவனங்களின் பொறுப்புக்கள் குறித்து விளக்கிய ஜனாதிபதி அவர்கள், எமது மக்களுக்கு என்ன தேவை என்பது பற்றி சரியாக கண்டறிவது ஆராய்ச்சியாளர்களின் பொறுப்பாகுமெனக் குறிப்பிட்டார். விவசாயத் துறைக்கு போன்றே மீன்பிடிக் கைத்தொழிலுக்கும் புதிய முறைமைகளை அறிமுகப்படுத்துவதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இரசாயன உரப் பாவனை பற்றி பிரச்சினை இருந்தபோதும் எமக்கு இன்னும் சேதன பசளையை பயன்படுத்தக்கூடிய நிலை இல்லை. மீன்பிடி கைத்தொழிலை எடுத்துக்கொண்டால் மீன்கள் அதிகம் உள்ள இடங்களை கண்டறிவதற்கு ஆராய்ச்சிகளை பயன்படுத்த முடியும். ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை இறுதியில் உற்பத்திகளாக சமூகமயப்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

No comments:

Post a Comment