நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் நியமனத்தில் பல்வேறு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில், பலமுனைப் போட்டிகள் நிறைந்த தேர்தல் களமாக வடக்குத் தேர்தல் களம் அமைந்திருக்கின்றது.
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து வடக்கு கிழக்கை மையப்படுத்திய பல கட்சிகளும் பல புதிய கூட்டணிகளை உருவாக்கியும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் அறிவிப்புக்களைச் செய்வதிலும் தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான சிலரது பெயர் விபரங்களும் வெளிவந்திருக்கின்றன.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இதுவரையான தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே அதிகளவில் மக்கள் ஆதரவை வழங்கி வந்திருந்தனர். ஆனால், இன்றைக்கு அந்தக் கூட்டமைப்பு பல வடிவங்களாக பிரிந்து புதிய புதிய கூட்டணிகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கடும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்ற அதேவேளையில், கடந்த பல தேர்தல்களில் அரசுடன் இணைந்து போட்டியிட்டு வந்த ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி இம்முறை தனித்து களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி கட்சியின் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா நேற்று யாழ். நகரில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஆகையினால், தமிழர் தரப்புக் கட்சிகளாக பல கட்சிகளும் அதேவேளையில் தென்னிலங்கை கட்சிகளும் மற்றும் சுயேச்சைகளும் எனப் பலதரப்பும் வடக்கில் களமிறங்கவுள்ளதால், சவால்கள் நிறைந்த பலமுனைப் போட்டி வடக்கில் ஏற்படவுள்ளது.
இவ்வாறான நிலைமையில், ஒவ்வொரு கட்சிகளும் தமது வேட்பாளர்களையும் தெரிவு செய்து வருகின்றன. இதில், சிலரது பெயர் விபரங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதில், யாழ் மாவட்ட தேர்தல் தொகுதியில் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் மீண்டும் களமிறங்கவுள்ளனர்.
அத்தோடு புதியவர்களாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பாலசிங்கம் கஜதீபன், குருமாசி சுரேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் அம்பிகா சற்குணானந்தன், வேதநாயகம் தபேந்திரன் ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தமிழ் மக்கள் கூட்டணியைப் பொறுத்தவரையில் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்கிணேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன், என். சிறிகாந்தா மற்றும் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோருடன் மேலும் புதியவர்கள் பலரும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன். தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணண், சட்ட ஆலோசகர் கெ.சுகாஸ், என்.காண்டீபன், மகளிர் அணித் தலைவி திருமதி வாசுகி உள்ளிட்டவர்களும் களமிறங்கவுள்ளனர்.
இதேபோன்று வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறிஸ் கந்தராசா, வினோ நோகராதலிங்கம். சார்ள்ஸ் நிர்மலநாதன், ஆகியோரருடன் புதியவர்களும் களமிறங்கவுள்ளனர்.
இத்தேர்தல் தொகுதியில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியைப் பொறுத்தவரையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட புதியவர்கள் களமிறங்கவுள்ளனர்.
இவ்வாறு முன்னர் இருந்தவர்கள் புதியவர்கள் எனக் கடும் போட்டி நிறைந்த தேர்தல் களமாக வடக்குத் தேர்தல் களம் அமையப் போகின்றது. அது மட்டுமல்லாமல் பல கட்சிகள் புதிய கூட்டுக்கள் எனப் பலமுனைப் போட்டிகள் நிறைந்த தேர்தல் களமாகவும் வடக்குத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை விசேட நிருபர்
No comments:
Post a Comment