உடைந்தது ஐக்கிய தேசிய கட்சி, ரணில், சஜித் தனித்துப் போட்டி - 22 மாவட்டங்களில் யானையில் களம் இறங்குகிறார் ரணில் - ஒன்றாகப் பயணிக்கவே விரும்புகின்றோம் ரஞ்சித் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Saturday, March 7, 2020

உடைந்தது ஐக்கிய தேசிய கட்சி, ரணில், சஜித் தனித்துப் போட்டி - 22 மாவட்டங்களில் யானையில் களம் இறங்குகிறார் ரணில் - ஒன்றாகப் பயணிக்கவே விரும்புகின்றோம் ரஞ்சித் மத்தும பண்டார

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் யானைச் சின்னத்தில் 22 மாவட்டங்களிலும் போட்டியிடுவதாக நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இது தொடர்பான கடிதத்தை நேற்றுக் காலை தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் கையளித்துள்ளார். 

சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியுடனான சமரச முயற்சிகள் இழுபறி நிலையில் தொடர்வதால், ஐக்கிய தேசிய கட்சி, இந்த முடிவை எடுத்திருப்பதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். 

கட்சித் தலைமைத்துவம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்பட்டபோதும் ஐக்கிய மக்கள் சக்தி அவற்றைப் புறக்கணித்துச் செயற்பட்டதன் காரணமாகவே இந்த உறுதியான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலில் தனித்துக் களமிறங்கப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் 90 வீதமானோர் (எம்.பிக்கள், அமைப்பாளர்கள் உட்பட) சஜித் தரப்புக்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பதாகவும் அவர் கூறினார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமையவே சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்திருந்த பங்காளிக் கட்சிகளை இணைத்து ஒன்றாக தேர்தலில் களமிறங்கவே கட்சியின் செயற்குழு உடன்பட்டிருந்தது. தேர்தலை எதிர்கொள்வதற்கான முழுப்பொறுப்பையும் சஜித் பிரேமதாசவிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுத் தீர்மானங்களுக்கு முரணாக தன்னிச்சையாக செயற்பட முனைந்ததன் காரணமாக இரு தரப்புக்குமிடையே விரிசலை தவிர்ப்பதற்காக பல்வேறு சமரச முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அவை உரிய பலனைத் தராததன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுவது தவிர்க்க முடியாததொன்றான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருப்பதை ஐக்கிய தேசிய கட்சி நிராகரிக்கவில்லை எனவும், அவர்கள் பிரிந்து நின்றாலும் கட்சி உறுப்புரிமையை இழக்கமாட்டார்களென்றும் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதேசமயம், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு சஜித் தரப்புக்கு கட்சியின் கதவு திறந்தே இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார். நாம் பல்வேறுவிட்டுக் கொடுப்புகளுடன் சமரசப் பேச்சுக்களை முன்னெடுத்த போதும் அந்த முயற்சிகள் இடைநடுவில் முறிவடைந்த வண்ணமே காணப்படுகின்றன. 

இந்த நிலையிலேயே கட்சித் தலைமைத்துவம் தேர்தலில் யானைச் சின்னத்தில் கட்சி போட்டியிடுவதற்குத் தீர்மானித்ததாகவும் தெரிவித்தார். 

கட்சியின் சின்னத்தை மாற்றிக் கொடுப்பதால் ஏற்படக்கூடிய சட்டச்சிக்கலை நிவர்த்திப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தை நாம் சுட்டிக்காட்டினோம். 

திருத்தத்துக்கு அவர்கள் பேச்சளவில் இணங்கிய போதும் செயலில் காட்ட முயற்சிக்கவில்லை. இப்படிப் பல்வேறு நிலைகளிலும் மறைமுகமான செயற்பாடுகள் தொடர்ந்ததன் காரணமாகவே கட்சி உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சி எடுத்திருக்கும் இந்தத் தீடீர் முடிவு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது தேர்தலொன்றின் போது காணப்படக் கூடிய சம்பிரதாயபூர்வமான நடவடிக்கையாக இதனைப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

நாம் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களாகவே இருப்போம். எமக்குச் சின்னம் பிரச்சினையாகக் காணப்படவில்லை. தலைமைத்துவம் தொடர்பில் ஏற்பட்ட அதிருப்தியே பிரச்சினையாகக் காணப்படுகின்றது. 

நாம் முடியுமான வரை ஒத்துழைத்துச் செயற்பட முயற்சித்தோம். சில விடயங்களின் அவர்கள் முரண்டு பிடிக்கின்றனர். இதன் காரணமாகவே சமரச முயற்சிகள் வெற்றியளிக்காமல் போனது. 

தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியும் 22 மாவட்டங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது.

அதே சமயம் சமரச முயற்சிகள் தொடர்கின்றன. அடுத்துவரக் கூடிய நாட்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம். பகைமையை வளர்த்துக் கொள்ள எங்களில் யாரும் விரும்பவில்லை. 

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படும் பிரயத்ததனங்களை நாம் இன்னமும் கைவிடவில்லை. ஒன்றாகப் பயணிக்கவே விரும்புகின்றோம். கட்சியின் ஒற்றுமைக்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றோம். அதன் காரணமாக சின்னத்தை தேர்வு செய்வதை தாமதப்படுத்தியதாகவும் மத்தும பண்டார தெரிவித்தார். 

இரண்டு தரப்புகளும் ஆளாளுக்கு விரல் நீட்டிக் கொண்டிருக்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுவது இன்று உறுதியாகியுள்ளது. கட்சியின் இந்தப் பிளவு தொடர்பில் தினரகன் வாரமஞ்சரி இரண்டு மாதங்களுக்கு முன்னரே தலைப்புச் செய்தியாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment