தேர்தலில் போட்டியிட விரும்பும் ஆளுநர்கள் வேட்பு மனுவில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் இராஜினாமா செய்ய வேண்டும் - 9 ஆம் திகதிக்கு முன்னர் அறிவித்தால் விசேட வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 7, 2020

தேர்தலில் போட்டியிட விரும்பும் ஆளுநர்கள் வேட்பு மனுவில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் இராஜினாமா செய்ய வேண்டும் - 9 ஆம் திகதிக்கு முன்னர் அறிவித்தால் விசேட வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும்

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்கள், நிறுவனத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கண்டிப்பான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட எண்ணியுள்ள அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் வேட்புமனுவில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் தங்கள் பணியிலிருந்து ஊதியமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோன்று நிறுவனங்களின் தலைவர்கள் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்ய ​வேண்டும் என்று அறிவித்துள்ள ஆணைக்குழுவின் தலைவர், மாகாண ஆளுநர்களும் வேட்பு மனுவில் கைச்சாத்திடுவதற்கு முன்னர் பதவியிலிருந்து விலகிவிட வேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மேலும், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பதவி விலகவேண்டுமென்றும் உறுப்பினர்கள் சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ள ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இவர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய வாகனங்கள், அரச வளங்கள் எவற்றையும் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவித்துள்ளார்.

தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதை உறுதி செய்யும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட ஆணைக்குழுவின் தலைவர், தெற்காசிய பிராந்திய நாடுகளிலிருந்து பார்வையாளர்களை அழைக்கவிருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, இடம்பெயர்ந்து வாழும் வாக்காளர்களின் வசதி கருதி இம்முறை விசேட வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காகப் புத்தளத்திலிருந்து மன்னார் சென்ற வாக்காளர்கள் அசௌகரியத்தைச் சந்தித்ததாக முறைப்பாடு செய்யப்பட்டது. 

எனவே, பொதுத் தேர்தலில் அவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், அவ்வாறு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கருதும் வாக்காளர்கள், நாளை 09ஆம் திகதிக்கு முன்னர் அதுபற்றி அறிவித்தால், அவர்களுக்கு விசேட வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

அதேநேரம், பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் கூறினார்.

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறுவதுடன், எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்ய முடியும். கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் 12 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவடைகிறது.

நாட்டின் 22 தேர்தல் நிர்வாக மாவட்டங்களுக்கும் வெவ்வேறு தொகையைக் கட்டுப்பணமாகச் செலுத்த வேண்டும். ஒரு வேட்பாளருக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம், குறித்த மாவட்டத்தின் வேட்பாளர் எண்ணிக்கையின்படி கட்டுப்பணம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment