(எம்.மனோசித்ரா)
புகைப்பிடிக்கும் பழக்கமுடையோரை நேரடியாக மிக எளிதில் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதால் அவ்வாறானவர்கள் அப்பழக்கத்தை உடனடியாக கைவிட வேண்டும். விற்பனையாளர்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி சமூக பொறுப்பினை நிறைவேற்ற வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித தெரிவித்ததாவது கொரோனா வைரஸ் பரவலினால் இலங்கையும் அவதான நிலைக்குட்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய விடயங்கள் என்பன பற்றி மக்கள் பல சந்தர்ப்பங்களிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு அரசாங்கத்தால் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் சிகரெட் உள்ளிட்ட புகைத்தல் பொருட்கள் பற்றி எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
புகைக்கும் பழக்கம் உடையவர்களுக்கு மிக எளிதில் வைரஸ் பரவக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக நாம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். எனினும் இன்றும் சிகரெட் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். புகைப்பிடிப்பவர்கள் நேரடியாக மிக எளிதில் தொற்றுக்குள்ளாவார்கள்.
எனவே விற்பனையாளர்கள் சுயநலமாக இன்றி பொது நலத்துடன் செயற்பட வேண்டும். அது மாத்திரமின்றி புகைத்தல் பழக்கம் உள்ள ஒவ்வொரு நபரும் தனது வாழ்க்கை மீதும் உயிர் மீதும் நேசம் கொண்டவராக இருந்தால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை உடனடியாக கைவிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment