அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழக்குகளை விசாரிப்பதற்கு எவ்வித சட்ட அதிகாரமும் இல்லை என சட்ட மா அதிபர் தப்புலா டி லிவேரா எழுத்து மூலமாக அவ்வாணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
இன்றையதினம் (11) குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையாகுமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பாக சட்ட மா அதிபர் அதற்கு விளக்கமளித்துள்ளார்.
யானை வளர்ப்பு மோசடி தொடர்பில் அலி ரொஷான் என்பவர் உட்பட 8 சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள வழக்கு தொடர்பில், நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி பேர்ள் கே. வீரசிங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயினும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத நிலையில், நேற்று (10) இரண்டாவது தடவையாக மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமது விசாரணைகள் முடிவடையும் வரை குறித்த வழக்கு விசாரணைகளைத் தொடர வேண்டாம் என குறித்த ஆணைக்குழு விடுத்த அறிவித்தலை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில், இன்று ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு சட்ட மா அதிபருக்கு அறிவித்திருந்தது. ஆயினும் அவர் இன்றையதினம் முன்னிலையாகவில்லை.
No comments:
Post a Comment