மட்டு கொரோனா தடுப்பு நிலைய விவகாரம் - எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்ட ஏறாவூர் நகர சபை - தீர்மானத்தை ஜனாதிபதிக்கும் சுகாதார அமைச்சுக்கும் அனுப்புமாறு பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 11, 2020

மட்டு கொரோனா தடுப்பு நிலைய விவகாரம் - எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்ட ஏறாவூர் நகர சபை - தீர்மானத்தை ஜனாதிபதிக்கும் சுகாதார அமைச்சுக்கும் அனுப்புமாறு பணிப்பு

மக்கள் அபிப்பிராயம் பெறப்படாமல் மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நிலையம் உருவாக்கப்பட்டு அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நூற்றுக்கணக்கானோர் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு தமது கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிடுவதாக ஏறாவூர் நகர சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வருவோர் தங்கவைக்கப்பட்டுள்ள நிலைமையின் பின்னர் மட்டக்களப்பு பிரதேசத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலை குறித்து ஆராயும் விஷேட கூட்டம் ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இன்று புதன்கிழமை 11.03.2020 இடம்பெற்றது. 

ஏறாவூர் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் பிரதேச வைத்தியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், நகர சபை உறுப்பினர்கள் நகர சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் தொடர்ந்து தனது கருத்தை வெளியிட்ட நகர சபைத் தலைவர், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் தொடர்ந்து 30 வருடங்களாக இடம்பெற்ற ஆயுத முரண்பாடுகளாலும், சுனாமி, சூறாவளி, பெருவெள்ளம் வறட்சி போன்ற இயற்கை இடர்களாலும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்துள்ளவர்கள். 

தற்போதுதான் அவர்கள் இத்தகைய இயற்கை செயற்கை மனித அழிவுகளிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் வேளையில் உலகை அச்சுறுத்தும் கொரோனா உயிர்க்கொல்லி வைரசுக்கு அந்த மக்களைப் பலிக்கடாவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குணமடைய வேண்டும் அவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசாங்கம் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் நாம் மனிதாபிமான ஆதரவை முழுமையாக வழங்கத் தயாராக உள்ளோம். ஆனால் கொரோனாவுடன் எந்தவிதத்திலும் தொடர்பில்லாத அப்பாவி மக்களிடத்தில் கொரோனாவைக் கொண்டு வந்து வலிந்து திணிப்பதை எம்மால் அனுமதிக்க முடியாது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வந்து சிகிச்சையளிக்கப்படவிருப்பதையும் நாம் வன்மையாக எதிர்க்கின்றோம். அத்தகைய தீர்மானத்தை எந்தத் தரப்பு எந்த முனைப்போடு எடுத்திருந்தாலும் அதனை ஏறாவூர் நகர சபையினராகிய நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு இந்தத் தீர்மானத்திற்கெதிராக எமது முழுமையான எதிர்ப்பையும் வெளிக்காட்டுகின்றோம். 

மேலும், எமது பிரதேச வைத்தியசாலைகளில் போதிய வைத்திய வசதிகள், ஆளணிகள் மிகவும் பற்றாக்குறையாக இருக்கின்ற இந்தத் தருணத்தில் மேலும் மேலும் எமது மக்களைப் பாதிப்படையச் செய்யும் எந்த முயற்சியையும் ஏறாவூர் நகர சபை இன மத பேதமற்று கண்டிக்கிறது” என்றார். 

நகர சபையின் இந்தத் தீர்மானத்தை உடனடியாக ஜனாதிபதிக்கும் சுகாதார அமைச்சுக்கும் அனுப்பி வைக்குமாறு நகர சபைத் தலைவர் அப்துல் வாஸித் நகர சபைச் செயலாளர் எம்.ஆர். ஷியாஹூல் ஹக்கைப் பணித்தார்.

வீரகேசரி

No comments:

Post a Comment