நாட்டு மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு நிலைமையைப் புரிந்து ஒத்துழைப்பு வழங்குங்கள் : இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 11, 2020

நாட்டு மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு நிலைமையைப் புரிந்து ஒத்துழைப்பு வழங்குங்கள் : இராணுவத் தளபதி

(எம்.மனோசித்ரா) 

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் இன்று அவர் விடுத்துள்ள விஷேட அறிவிப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், அதற்கமையவே புணானை மற்றும் கந்தக்காடு ஆகிய பிரதேசங்களில் மருத்துவ சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காகவே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கண்காணிப்பிற்காக புணானையில் மருத்துவ சோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளமைக்கு பிரதேசவாசிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட அனைவரும் இலங்கை மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு நிலைமையை புரிந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அரசாங்கத்தால் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரானிலிருந்து வருகை தருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்புக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது. அதற்கமையவே புணானை மற்றும் கந்தக்காடு ஆகிய பிரதேசங்களில் மருத்துவ சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டன. 

குறித்த நாடுகளிலிருந்து வருகை தருகின்ற இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் இவ்விரு சோதனை நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 பேர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். ஏனையோர் விஷேட பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். 

இலங்கையில் வாழும் ஏனைய மக்களின் நலன் கருதியே இவ்வாறானதொரு நடவடிக்கையை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. எனினும் வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக நாம் கருதவில்லை. ஆனால் வருகை தரும் அனைவரும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவது ஏனைய மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டேயாகும். இதனை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். 

புணானையில் மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்கு பிரதேசவாசிகளால் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன. இன்று காலையும் பூணானையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றுவிட்டனர். இதே போன்று நாட்டுக்கு வருகை தருபவர்களும் நிலைவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 

இரண்டு நாட்கள் என்ற மிகக்குறுகிய காலத்திலேயே இந்த இரு மருத்துவ சோதனை நிலையங்களும் அமைக்கப்பட்டன. எனவே சில குறைபாடுகள் காணப்படலாம். எனினும் அங்கு கண்காணிக்கப்படுபவர்களுக்கு எம்மால் வழங்கக் கூடிய உயர்ந்தளவு வசதிகள் செய்து கொடுக்கப்படும். 

எனவே குறைபாடுகள் காணப்பட்டால் அவற்றை ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். ஆபத்தான நிலைமையை உணர்ந்து எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment