இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரித்தானியர்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் இராணுவத் தளபதியை சந்தித்து - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரித்தானியர்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் இராணுவத் தளபதியை சந்தித்து

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரித்தானியர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்களின் சுகாதார நலன் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சராஹ் ஹல்டன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்துள்ளார். 

இந்த சந்திப்பு புதன்கிழமை இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. 

சந்திப்பு தொடர்பில் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தற்போதைய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், தனிமைப்படுத்தல் நிலையங்களிலுள்ள பிரித்தானியர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்களின் சுகாதார நிலைமைகள் போன்ற விடயங்கள் தொடர்பான விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இராணுவத் தளபதியை சந்தித்தார். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள வகிபாகம் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது விளக்கமளிக்கப்பட்டது. 

இவ் வைரஸின் தீவிர தன்மை மிக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டபோது இராணுவம் எவ்வாறு கந்தக்காடு மற்றும் புனானை ஆகிய இடங்களில் ஆரம்பித்து சில நாட்களுக்குள் மிகவும் அத்தியாவசியமான இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மேம்படுத்தியது என இச்சந்திப்பின் போது லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தினார். 
தியத்தலாவை மையங்களில் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ள ஐந்து பிரித்தானிய பிரஜைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், உணவு வகைகள் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் அவர் எடுத்துக்கூறினார். மேலும் அந்த நபர்கள் இரண்டு வார காலம் முடியும் வரைக்கும் எவ்வாறு உறவினர்களுடனான பிணைப்பு விடங்கள் தொடர்பாக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார். 

அங்கு வருகை தந்த உயர்ஸ்தானிகர் சுகாதார அதிகாரிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய விடயங்களின் தேவைப்பாடுகள் தொடர்பாக விசாரித்தார். 

மேலும் இவ் வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் முகமாக இரு நாடுகளுக்குமிடையிலான மருத்துவ நிபுணர்கள் அனுபவங்கள் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளும் அதேவேளை இந்த உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துரைத்தார். 

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு தனிமைப்படுத்தல் நிலையங்களின் எண்ணிக்கை, அதன் அமைவிடங்கள் மற்றும் அத்தனிமைப்படுத்தல் நிலையங்களில் காணப்படும் வசதிகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

No comments:

Post a Comment