எனக்கு கொரோனாவா? - மறுத்தார் பிரேசில் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

எனக்கு கொரோனாவா? - மறுத்தார் பிரேசில் ஜனாதிபதி

தனக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும், வைரஸ் பாதிப்பு தனக்கு இல்லை எனவும் பிரேசில் ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. 

உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அந்நாடு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், துணை ஜனாதிபதி மைக் பென்சி மற்றும் பிரேசில் நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டு ஜனாதிபதியின் தகவல் தொடர்பு செயலாளர் பஃபியோ வஜ்ஹர்டினும் பங்கேற்றார். 

ஜனாதிபதியின் தகவல் தொடர்பு செயலாளர் என்பதால் அவர் ஜெய்ர் போல்சனரோவின் அருகில் அமர்ந்து டொனால்டு டிரம்பிற்கு மொழி பெயர்ப்பு உள்ளிட்ட உதவிகளை செய்துவந்தார்.

நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரேசில் ஜனாதிபதியுடன் நாடு திரும்பிய தகவல் தொடர்பு செயலாளர் பஃபியோ வஜ்ஹர்டினுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், தனக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக வெளியான தகவலை பிரேசில் ஜனாதிபதி முற்றிலும் மறுத்துள்ளார். 

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தனக்கு கொரோனா வைரஸ் குறித்த மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், பரிசோதனையின் முடிவில் கொரோனா எதுவும் பரவவில்லை என பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment